பக்கம் எண் :

338கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 43

வேல்விழியாள் கருக்கொண்டாள் என்றறிந்த
வேழன்எனக் காண்மகவு பிறக்கு மென்றான்.

மற்றொருநாள் மாடத்துத் தனித்தி ருந்து
      மாவின்காய் ஒன்றெடுத்துப் பாவை தின்றாள்;
பற்றுடனே வேல்விழிபால் வந்த வேழன்
      பார்த்ததனை நகைக்கஅவள் மறைத்துக் கொண்டாள்;
‘முற்றியநற் கனியிருக்கக் காயை வேண்டும்
      முழுமதியை என்னென்பேன்’! என்றா னாக,
நெற்றியிலே பாதிமதி யுடையாள் ‘இந்த
      நேரத்தில் காயொன்றே இனிக்கும்’ என்றாள்.182

‘கனியாத காயினிக்கும் நேர மொன்று
      கண்டதிலை விந்தையிது’ வெனந கைத்தான்
‘இனிதாக மண்ணுடனே சாம்பர் தின்னும்
      இந்நேரம் புளிப்பென்ன கைத்தா போகும்?
தனியான இன்புலகில் இருவேம் மட்டும்
      தனித்திருந்தோம் மகிழ்ந்திருந்தோம்; நமது காதற்
கனியாக அன்புக்கோர் சின்ன மாகக்
      காணுகின்றேன் என்வயிற்றில் மற்றோர் ஆவி.183

தாயாகும் நிலையெனக்கு வாய்க்கும் பேறு
      தந்தவற்கே சொல்லாமல் மறைத்து வைத்தேன்
காயாமல் பொறுத்தருள்க’ என்றாள் மங்கை;
      களிப்பதனாற் பெருமுழக்கம் செய்தான் வேழன்;
‘சேயாக ஒருமகனை எனக்க ளித்தாய்!’
      சிந்தைஎலாம் இனிக்கின்ற செய்தி சொன்னாய்!
ஓயாத பெருவலியன் மற்றோர் வீரன்
      உலகத்தில் தோன்றுகின்றான்! வீரங் காப்பான்.184


முழுமதி - பேரறிவு (நகைக் குறிப்பு) சாம்பர் - சாம்பல். காயாமல் - கோபிக்காமல்