பக்கம் எண் :

வீரகாவியம்339

தந்தையென எனையாக்கும் இனிக்குஞ் செய்தி
      தருவதற்கோ புளிக்கின்ற காயை யுண்டாய்?
கந்துமிகும் மாவேழற் கிணையாய் நிற்கும்
      காளைநிகர் ஒருவீரன் எவனும் இல்லை;
விந்தைமிகும் அவனுக்கே மகனாய் வந்தோன்
      வீரத்தால் எதிராவான் என்று பாரில்
எந்தமுகம் நோக்கினுமே கேட்கச் செய்யும்.
      இணையில்லான் நின்வயிற்றில் வளரு கின்றான்.185

மனக்கினியாய்! மாவீரன் வாழ்க என்றே
      வாழ்த்துகிறேன்’ எனமீண்டும் முழங்கி நின்றான்;
‘சினக்களிற்றின் மிகுவலியோய்! கற்ப னைத்தேர்
      செலுத்துவதில் வல்லாய்நீ! புரவி வாங்க
நினைக்குமுனம் கசையொன்று வாங்கி விட்டாய்!
      நெடிதுழன்று கருவுயிர்க்கா முன்னர் ஆண்தான்
எனக்கழறி போர்மறவன் ஆக்கி விட்டாய்!
      எதிர்காலக் கற்பனையில் கவிஞன் ஆனாய்!186

பெண்பிறவா தெனும்நினைவோ? யாரே கண்டார்?
      பிறந்துவிடின் என்செய்வை? ஆணோ பெண்ணோ
கண்மணிபோல் நாம்வளர்ப்போம்; கட்டிக் காப்போம்;
      காலமினும் ஐந்தாறு திங்க ளுண்டு
நண்பகலில் கனவெதற்குப் பிறகு பார்ப்போம்!
      நங்கையிவை மொழிந்தவுடன் வேழன் சொல்வான்
‘மண்புகழும் பெருவீரன் எனக்கு மைந்தன்
      மாவீரன் தான்பிறப்பான் ஐய மில்லை.187

பெரும்படையை எதிர்நின்று பொருது வென்ற
      பேராற்றல் கண்டுலக வீரன் என்று
தரும்பெயரைப் பெற்றுள்ளேன்; இந்நாள் மட்டும்
      தருக்கிஎதிர் வருவோரைக் காணு கில்லேன்;
அரும்புகழைப் பெரும்விருதைப் பிறருக் காக்க
      அணுவளவும் ஒவ்வேனென் பரம்ப ரைக்கே
வரும்படிநான் செய்வதுதான் கடனும் ஆகும்;
      வளர்கின்ற நின்கருவும் ஆணே’ என்றான்.188


கந்து - வலிமை. கசை - சாட்டை. எதிராவான் - ஒப்பாவான்