பண்டிளமைப் பருவத்தே எனது நாட்டில் பாய்மதமா வெறிகொள்ள மக்க ளஞ்சக் கண்டுடன்கைத் தண்டொடுசென் றதனைத் தாக்கிக் கலங்கிஅது நிலந்தனிலே வீழ்ந்து சாகக் கண்டவன்நான்; மைந்துடைய எனக்கு மைந்தன் களங்களிலே எனைவிஞ்சும் வலிய னாகித் தண்டுபல துண்டுபடப் பொருதுங் காட்சி தணவாமல் கண்டுகண்டு மகிழ வேண்டும்.192 பெற்றெடுத்துப் புறங்காத்துப் பேணி, உள்ளப் பெட்புடனே வளர்ப்பதுநின் கடனே யாகும்; செற்றமொடு பொருகளத்து வீரர் தம்முட் சீர்மைமிகு தலைவீரஞ் சான்றோன் என்ன முற்றுபுகழ் பெற்றிடவே பயிற்று விக்கும் முழுப்பொறுப்பும் எனக்கிருக்கும் கடனே யாகும்; கற்றபடி உற்றமர்கள் பலமு ருக்கிக் களிறெறிதல் காளைக்குக் கடனே யாகும்.193 வாள்பற்றிச் சுழன்றுசுழன் றவன்போர் செய்ய வட்டமிடும் பொழுதத்தில் ஆர்ப்ப ரிப்பேன்; தோள்தட்டிக் கெக்கலிப்பேன்’ என்றே ஆர்த்தான்; துய்யமணி மண்டபமே முழங்கிற் றம்மா! வேள்விட்ட பெருமுழக்கால் அஞ்சிப் ‘பேறு விளையுமுனம் இம்முழக்கா’ என்றாள் தோகை; ‘வாள்சுற்றும் போர்க்களத்தில் சீறும் போதும் மகிழ்பொழுதும் ஆர்ப்பரித்தல் என்வ ழக்கம்;194 அஞ்சல்விடு வஞ்சியொரு வீர னுக்கே அன்னையென ஆகியநீ நடுங்கல் நன்றோ? கொஞ்சுமொழி மைந்தனுக்கு வீரப் பாலே கொடுத்துமற மூட்டுவதுன் கடனே’ என்றான்; பஞ்சினுமெல் லடியுடையாள் அவன்சொற் கேட்டுப் ‘பாவைஎன்றன் மணிவயிற்றில் வளரும் செல்வம் அஞ்சுகம்போல் பெண்ணாகப் பிறக்க வேண்டும்; அகலாமல் என்வயமே இருக்க வேண்டும்’.195
தண்டு - போர்க்கருவி. சேனை. தணவாமல் - நீங்காமல். முருக்கி - அழித்து, அஞ்சுகம் - கிளி |