இயல் - 45 நாவலத்தான் படையெடுத்த செய்தி கேட்டு மூவகத்து மாவேழன் கொதித்தெ ழுந்தாள். நாவலத்துப் பெருங்கனகன் பகைமை பூண்டு நட்புரிமை விட்டொழித்துச் செருக்குக் கொண்டு மூவகத்துட் பெரும்படையை ஏவி விட்டான்; முனைத்தெழுந்து படையெடுத்து மதலைக் கோவும் காவலுக்குப் புறப்பட்டான் என்ற செய்தி களிறடக்கும் மாவேழன் செவியிற் கேட்டான்; போவதற்குக் கொதித்தெழுந்தான் முகஞ்சி வந்தான் பூரித்த தோள்தட்டி ஆர்ப்ப ரித்தான்.197 ஆர்ப்பரித்த ஒலிகேட்டு நங்கை வந்தாள்; ‘ஆயிழையே! நானில்லாப் பொழுத றிந்து போர்ப்படையை நாவலத்தான் எனது நாட்டிற் புகுத்தியுளான் எனுஞ்செய்தி இன்று கேட்டேன்; தேர்ப்படையால் வாட்படையால் எதிர்த்தா னேனும் செருக்கடக்கிப் படைமடக்கிப் பிறக்கிட் டோடத் தார்ப்புரவி செலுத்திப்போர் வென்று மீள்வேன்; தரியலரைச் சிதறடித்துக் கொன்று மீள்வேன்’.198 என்னுஞ்சொற் செவியுறலும் மலர்வி ழிக்குள் இருக்கின்ற புனலெல்லாம் சோர விட்டாள்; வன்னெஞ்சன் தோள்தழுவி விரிந்த மார்பில் மலர்முகத்தைப் பதியவைத்து விம்மி நின்றாள்; கன்னெஞ்சன் எனினுமவன் காதற் செல்வி கண்ணீரால் கரைந்திளகி இரக்கங் கொண்டு, ‘மின்னுஞ்சேல் விழியுடையாய் என்ன கண்டு விம்முகின்றாய் வெம்புகின்றாய்? நிமிர்க! என்றான்.199
பிறக்கிடல் - முதுகுகாட்டல், தார் - முன்னணிப்படை சேல் - கயல்மீன் |