இயல் - 46 செருவினை வேட்டுச் சினந்தெழு வேழன் பிரிவினை யஞ்சிப் பேதை புலம்பினள். ‘பிரிந்துறைதல் ஆண்மக்கட் கெளிய செய்கை; பேதையர்க்கோ கொழுநர்தமைத் தணந்து வாழ்தல் வருந்தியழும் கொடுஞ்செயலாம்; கொழுகொம் பின்றி வாடுகின்ற பூங்கொடியாய் வதிக என்றால் பொருந்துகிற செயலாமோ? வயிறு வாய்த்த பொழுதத்துப் பிரிந்துழலச் செய்தல் நன்றோ? நறும்புனலை மீன்பிரிந்து துடித்தல் போல நான்துணையை விட்டகன்று தவித்தல் நன்றோ?201 களம்பலவும் சென்றுவந்தீர் வென்று வந்தீர்! காலமெலாம் போரொன்றே குறியாக் கொண்டீர்! குளம்படிந்து நீந்துதல்போல் போரில் நீந்திக் குளித்தாலும் ஆசையினும் அடங்க வில்லை? உளம்பொருந்துங் காதலிக்குத் தனிமை தந்தே ஓடுதல்தான் வீரர்தமக் கழகோ? பாரோர் விளம்புபுகழ் போதாவோ? எங்கும் வீரம் விளைத்தவெலாம் போதாவோ?’ எனத்து டித்தாள்.202
தணந்து - பிரிந்து. வயிறுவாய்த்தல் - கருக்கொள்ளுதல். |