பக்கம் எண் :

346கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 47

தேறிய சிலமொழி செப்பிய வேழன்
ஆறுதல் கூறி அகன்றனன் ஆங்கே.

‘புகழுக்குப் போர்புரியச் செல்வே னல்லேன்;
      புரிகின்ற காதலினும் கடமை ஒன்றே
மகனுக்குப் பெரிதாகும்; பிறந்த மண்ணின்
      மானத்தைக் காப்பதென்றன் கடமை யாகும்;
இகழ்வுக்குத் திருநாட்டை விட்டு விட்டால்
      எனையன்றோ எள்ளிநகை யாடி நிற்பர்!
தகைமிக்க தாயைமறந் தாலும் பிள்ளை
      தாய்நாட்டை மறப்பதொரு கொடுமை யன்றோ?203

பொருந்தலர்க்கென் பொன்னாடு பணிந்து விட்டால்
      பொருவேழன் இருந்தென்ன மாய்ந்தா லென்ன?
வருந்தற்க! தாயகத்தின் துயர்த ணித்து
      வந்திடுவேன் நின்துயரம் தணிப்ப தற்கே;
பொருந்தொழிற்குட் புகுந்துவிடின் இன்பம் காணும்
      புலனுணர்ச்சி வாழ்க்கைநலம் அணுகா என்பால்;
விருந்தளிக்கும் அகத்துறைகள் நல்கும் இன்பம்
      வீரமுறு புறத்துறையால் என்முன் தோற்கும்.204

மறக்குலத்து மாமகளே! உலக வீரன்
      மாவேழன் மனைவிஎனில் கலக்கம் கொள்ளேல்;
திறற்களத்து வென்றிபெற வாகை சூடச்
      சிரித்தமுகங் கொண்டென்னை வழிய னுப்’பென்
றுரக்களிற்றின் மிகுவலியன் விறைத்து நின்றான்;
      உள்ளத்துள் இசையாளாய் இருந்த போதும்
மறுப்புரைக்க இயலாமல் சிரித்து நின்றாள்;
      மாவேழன் அவள்கன்னம் சிவக்கச் செய்தான்.205


மகன் - வீரன்