| 348 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 48 பிரியாத் துணைவன் பிரிவால் வாடிப் புரியாத் துயரொடு புலம்பினள் வேல்விழி உயிர்தளிர்ப்பச் செய்திருந்த கொழுநன் இன்றவ் வுயிர்தவிக்கச் செய்தகன்று சென்றா னாகப் பயிர்தவித்துத் துவள்வதுபோல் தளர்ந்தாள் நங்கை; பாவையவள் பொழுதொன்று கழிவ தற்குள் மயல்பழுத்துப் படும்பாடு பெரும்பா டாகும்; மனங்கவர்ந்த காதலனை நினைந்தி ரங்கும் மயிலவட்குத் துணைசெய்ய யாரே உள்ளார்? மாதென்றும் பாராமல் பிரிவு கொல்லும்.208 தொடும்பொழுது மட்டுந்தான் தொடுவோர் தம்மைச் சுடுநெருப்பைக் கண்டதுண்டு; என்றன் வாழ்வில் விடும்பொழுது சுடுகின்ற நெருப்பொன் றுண்டு; விந்தைமிகும் அவ்வொன்று காம மாகும்; அடும்பொழுதும் மெல்லியநன் மாத ரைத்தான் அளவின்றித் துயருறுத்தும் போலும்! இந்தக் கெடுங்குணமேன்? கண்ணில்லை என்று மாந்தர் கிளப்பதனால் கருணையொன்று மில்லை போலும்!209 கண்ணில்லாக் காமத்தின் வெம்மை தாக்கக் கணவன்றன் நினைவதனால் உருகும் நெஞ்சம் புண்ணில்லாப் புண்பட்டுப் போன தாலே புழுவானாள் மெழுகானாள் அந்தத் தீயில்; எண்ணில்லாத் துயராலே நையும் பாவை இரவென்றும் பகலென்றும் மாலை என்றும் மண்ணில்லாப் பொழுத னைத்தும் மாறி மாறி வந்துதுயர்ப் படுத்துவதால் புலம்பு கின்றாள்.210
அடும்பொழுது - வருத்தும் பொழுது. மண்நில்லா - உலகில் நிலைத்து நில்லாத. |