பக்கம் எண் :

வீரகாவியம்349

‘உறவுக்குத் துணையானான் இன்பந் தந்தான்
      உழல்கின்ற பிரிவுக்கும் துணையாய் நின்றான்;
வரவுக்கு வழிநோக்கி ஏங்கும் என்றன்
      வாழ்வுக்கு மலர்ச்சிதர வரும்நாள் என்றோ?
நறவுக்குச் சுற்றிவரும் வண்டே போல
      நாள்முழுதும் எனைச்சுற்றிச் சுற்றி நின்றான்
செருவுக்குப் போய்விட்டான் தவிக்க விட்டுச்
      செயலிழந்து துயிலிழந்து புலம்ப விட்டு.211

மறைக்கின்றேன்; இந்நோயைப் பிறர்க்கு ணர்த்த
      மாட்டாமல் தவிக்கின்றேன்; ஆயி னுந்தான்
இறைக்கின்ற நீர்போல ஊறி ஊறி
      ஏறுவதைக் காண்கின்றேன்; நட்பா லன்பு
சுரக்கின்ற என்னிடமே இதுசெய் தாரேல்
      சூழ்பகைமை கொண்டோரை என்செய் வாரோ?
பிறைக்கொன்றும் நுதலார்தம் பிரிவால் நேரும்
      பெருந்துயரம் ஆடவர்க்கு வாரா தேயோ?212

காதலரைக் கூடிமகிழ் பொழுதி லின்பம்
      கடல்போலப் பெரிதாகும்; பிரிந்து விட்டால்
வேதனையோ கடலைவிடப் பெரிதாய்த் தோன்றும்;
      வீரரவர் என்னோடு பயிலும் போதும்
போதனைய என்விழிகள் துயில வில்லை;
      போர்புரியக் கருதியவர் பிரிந்து விட்டார்
ஆதலினால் இன்றுமவை துயில வில்லை;
      அன்றவைதாம் கண்டதின்பம்; இன்றோ துன்பம்!213

ஊரெல்லாம் உறைபவரைத் துயிலப் பண்ணி,
      ஒருதனிமைக் கஞ்சியஇவ் விரவுப் போது
பாரெல்லாம் தேடியொரு துணைகா ணாமல்
      பாவையெனைத் துணையாகக் கொண்ட தேயோ?
போரெல்லாம் வென்றவரென் னுடனு றைந்த
      பொழுதெல்லாம் வெகுவிரைவில் இரவு செல்லும்;
வேரெல்லாம் வீழ்த்ததுபோல் நிலையா யின்று
      விடியாமல் நெடுநேரம் தங்கிக் கொல்லும்.214


செரு - போர். வேர் வீழ்த்தல் - வேர்விடுதல்.