அன்புக்கோர் அறிகுறியாய்க் காதல் வாழ்வின் அரியதொரு விளைபயனாய்ப் பிரிவு தந்த துன்புக்கோர் அருமருந்தாய்ப் பிறந்த சேயைத் துணைவிழியால் அருள்பொழிய நோக்கிப் பெற்ற இன்புக்கோர் அளவில்லை; தாய்மை நெஞ்சம் இருப்பவர்க்கே அதுபுலனாம்; மகிழ்வு ணர்ச்சி என்புக்குள் பாய்வதுபோல் உணர்வு கொண்டாள்; இடரனைத்தும் போயொழியப் பெற்றாள் அன்னை.229 பெற்றமகன் தளிருடலைப் பஞ்சின் மென்மை பெற்றிருக்கும் கைவிரலால் பூப்போல் தொட்டுக் கற்றுணர்ந்த சான்றோரின் பாட லுக்குள் கரந்திருக்கும் உட்பொருளை உணர்ந்தார் போல உற்றஒரு மகிழ்ச்சியினால் சொக்கிக் காதல் ஒள்வேலான் ஆண்மகனே பிறப்பான் என்று சொற்றசொலை மனத்தகத்து நினைத்துக் கொண்டு சூரனுக்கு வாழ்த்துரைத்தாள் தொழுதாள் அன்னை230
கரந்து - மறைந்து. சொற்ற - சொன்ன. |