பக்கம் எண் :

356கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 52

வேல்விழிக்குப் பெண்மகவு பிறந்த தென்று
வேழனுக்கு வயத்தரசன் தூது விட்டான்!

குலக்கொடியாம் தன்மகட்கு மகன்பி றக்கக்
      கூர்மகிழ்வு வயத்தரசன் கொண்டா னேனும்
கலக்குறுத்தும் பெரும்பகையால் இரண்டு நாடும்
      கடும்போரில் ஈடுபட்டு நிற்ப தாலே
பலர்க்குரைத்துத் திருநாள்கொண் டாட வில்லை;
      பாலகன்றன் வெள்ளணிநாட் சிறப்பை எல்லாம்
இலக்கணநூற் பாவென்னச் சுருக்கிக் கொண்டான்;
      இன்பமெலாம் மறைபொருளா அடக்கிக் கொண்டான்.231

ஒருமகனாம் முதல்மகன்றான் பிறக்கும் போழ்தே
      ஓராண்டுப் பருவத்தன் போலி ருந்தான்;
நறுமலரின் மலர்ச்சிஎன முகம்ம லர்ந்து
      நாளெல்லாம் சிரித்திருக்கும் கார ணத்தால்
முறுவலனென் றொருபெயரால் அழைத்து வந்தார்;
      முன்பொழுதின் பின்பொழுது மேனி வண்ணம்
பெருகிவர வளர்ந்துவர ஒளிமி குந்து
      பேரழகுப் பறழ்புலிபோல் வளர்ந்து வந்தான்.232

மகன்பிறந்த மகிழ்ச்சியினைத் தந்தை யான
      மாவேழற் குணர்த்துவலென் றுள்ளங் கொண்டு
மகள்வயினவ் வயத்தரசன் எடுத்து ரைத்தான்;
      மங்கையவள் அம்மொழிக்கு மறுப்பு ரைத்தாள்;
‘மகனெனவே செய்திசொலி அனுப்ப வேண்டா
      மைந்தனென அறிந்துவிடின் முறுவல் பூத்த
முகனிவனைத் தன்னகர்க்கே எடுத்துச் சென்று
      முனைமுகத்துக் கிடந்திடுவான் போரில் வல்லான்.233


வெள்ளணிநாள் - பிறந்தநாள். முறுவலன் - புன்னகையுடையவன் பறழ்புலி - புலிக்குட்டி