பக்கம் எண் :

வீரகாவியம்357

வரைந்திருத்த கொழுநரெனை வரைந்து சென்ற
      வாட்டமினுந் தணியவில்லை; வேர்கொண் டோங்கும்
அருந்துயரம் சிறிதேனும் அறுந்து போக
      ஆற்றுமிவன் முகங்கண்டு வாழு கின்றேன்;
மருந்தனைய இவனையும்நான் பிரிந்து விட்டால்
      மாய்தலன்றி வேறில்லை; என்றன் வாழ்வின்
குருந்தனைய மலர்முகனைச் சுமந்து பெற்ற
      குலமகனை எவ்வணம்நான் பிரிந்து வாழ்வேன்?234

தன்மகனைப் பெருவீரன் ஆக்கு தற்கே
      தணியாத விருப்புடையான்; அதனால் என்றும்
வன்மைமிகு போர்முறையே பயிற்று விப்பான்;
      வளர்ந்துவிடின் இவனுமவன் போல நாளும்
கொன்முறைய போர்க்களமே குடியாக் கொள்வான்;
      கொடியிடையாள் ஒருத்தியிவன் மனையாய் வந்தால்
என்னிலைபோல் அவள்நிலையும் ஆகும்; பாவம்!
      என்தந்தாய் உண்மைநிலை சொல்ல வேண்டா.235

பெண்மகவு பிறந்ததெனப் பொய்ம்மை ஒன்று
      பேசுவதால் குற்றமிலை; யார்க்குந் தீங்கு
முண்ணுனியின் அளவேனும் விளைவ தில்லை;
      மொழியினொரு புரைதீர்ந்த நன்மை வாய்க்கும்;
கண்மணியை என்னுயிரைக் காப்ப தென்றால்
      களம்வதியும் காதலர்க்குத் தயக்க மின்றிப்
பெண்மகவே பிறந்ததென்று செய்தி சொல்லிப்
      பேதைமனம் தளிர்ப்பதற்கோர் உய்தி நல்கு!,236

என்றிறைஞ்சி நின்றாளை இரங்கி நோக்கி
      ‘என்மகளே நின்மனம்போற் செய்வேன் அஞ்சேல்;
உன்றனுள மகிழ்வன்றி வேறொன் றில்லேன்;
      உன்மகனை நின்வயமே இருக்கச் செய்வேன்;
கன்றினைவிட் டகல்கின்ற ஆவின் தன்மை
      கனவகத்தும் வாராமல் காத்து நிற்பேன்’
என்றவட்கு மன்னவனும் உறுதி சொல்லி
      ஏவலரை வேழன்பால் அனுப்பி வைத்தான்.237


வரைந்து - மணந்து குருந்து - குருத்து முண்ணுனி - முள் நுனி. புரை - குற்றம், உய்தி - ஈடேற்றும்வழி.