பக்கம் எண் :

358கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 53

வளர்மதி போல வளரும் முறுவலன்
பலர்புகழ் கோளரிப் பட்டம் பெற்றான்.

பகைகொண்ட இருநாடும் உருத்தெ ழுந்து
      பகைப்புலத்து நின்றுவரும் கார ணத்தால்
முகைவிண்ட மலர்மாலை சூடும் நாளில்
      முன்னமவள் தந்தைக்குத் தந்த சொல்லால்
தகைகொண்ட மாதரசி தந்தை நாட்டில்
      தன்கொண்கன் தருபிரிவின் துயரந் தாங்கி
நகைகொண்ட முறுவலன்றன் முகமே நோக்கி
      நன்முல்லைப் பொருளுக்கோர் இலக்காய் நின்றாள்.238

வலியாலும் வடிவாலும் சிறிதும் அஞ்சா
      வகையாலும் வனப்பாலும் வாய்மு ழக்கும்
ஒலியாலும் நடையாலும் சிறப்புற் றோங்கி
      ஒப்பில்லா மாவேழற் கிணையே யாகப்
புலிபோலும் அவ்விளைஞன் மூன்றாம் நாளிற்
      பூத்துவரும் வளர்பிறைபோல் நாளும் நாளும்
பொலிவோடு கலையோடு வளர்ந்து வந்தான்;
      பூரித்து புதுமகிழ்வு கொண்டா ளன்னை.239

தன்னொத்த பருவத்துச் சிறுவ ரோடு
      தான்கலந்து மகிழ்ந்துவிளை யாடும் போதும்
மின்னொத்துப் பொலிகின்ற வேலும் வாளும்
      வீசிஎறிந் தார்ப்பரிப்பான்; வீரங் காட்டும்


முகைவிண்ட - அரும்பு விரிந்த. கொண்கன் - கணவன். முல்லைப் பொருள் - முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள், (கணவனைப் பிரிந்து ஆற்றியிருத்தல்).