பக்கம் எண் :

வீரகாவியம்361

இயல் - 54

தன்னைப் பெற்ற தந்தை யாரென
அன்னையின் பாலவன் அறிய வினவினன்.

மதிலுயர்ந்த கோவிலுக்குள் பிறந்தா னேனும்
      வனப்புமிகு காடுகளில் உறைந்த நேரம்
அதிகமெனத் திரிந்ததனால் தந்தை பற்றி
      அறியாமல் வளர்ந்திருந்தான்; எனினும் ஓர்நாள்
மதியணிந்த நுதலாளை அணுகி, ‘அன்னாய்!
      மகனென்னைப் பெற்றெடுத்த தந்தை யாவர்?
வதியுமிடன் யாண்டுளதோ? இன்னும் இங்கே
      வாராத தென்கருதி? விளங்கச் சொல்வாய்.245

உயிருடன்தான் உள்ளனரா? உள்ளா ரென்றால்
      உனையின்றும் உள்ளாராய் இருப்ப தென்கொல்?
செயிருடன்தான் கைவிட்டுப் பிரிந்தார் என்றால்
      சினங்கொள்ள நீசெய்த செயிர்தான் என்ன?
உயர்குடியாம் மன்குடியில் பிறத்தல் செய்யா
      ஒருத்திஎனை மண்குடிலில் பெற்றாள் கொல்லோ?
துயருடையேன் எனைவளர்ப்புப் பிள்ளை யாகத்
      தொட்டிலிலே பெற்றனையோ? உற்ற தென்கொல்?246

எனைமகவாப் பெற்றானைக் காண்ப தென்றோ!
      என்றேனும் காணும்நிலை வாரா தேயோ?
அனைவருமென் னிலைகண்டே எள்ளும் வண்ணம்
      ஆயிற்றே! ஆதரவாம் தந்தை யில்லாத்
தனயனெனச் சொலும்பழியைப் பெற்றேன் அந்தோ
      தலைகவிழச் செய்தனரே! வீர மெல்லாம்
முனைமழுங்கிப் பாழாக, வினையொன் றிங்கே
      மூண்டெழுந்து துயர்ப்படுத்த வந்த தேயோ?’247


உள்ளாராய் - நினையாராகி. செயிர் - கோபம், குற்றம் மன்குடி - அரசர்குடி, மண்குடில் - மண் குடிசை.