இயல் - 55 மாவேழன் பெற்றமகன் என்றாள் அன்னை மைந்தனவன் சொலற்கரிய மகிழ்வு கொண்டான். ‘கொன்றனைய இன்னாச்சொல் மற்றும் ஓர்கால் கூறாதே நின்வாயால்’ என்று, தன்முன் நின்றவனை முகம்நோக்கி நெடிது யிர்த்து நீர்மல்கப் புகல்கின்றாள், ‘என்றன் சேயே உன்றனையும் பிரிவதற்கோர் உள்ள மில்லேன் உண்மையினை மறைத்திருந்தேன் மற்றொன் றில்லை; நின்றொளிரும் கதிரவனை இரவு வந்து நெடுநேரம் மறைத்தாலும் மறைந்தா போகும்?250 தனக்குநிகர் எவருமிலாத் தறுகண் வீரன், தந்தைஒரு பிள்ளையடா நீ; இப் பாரில் உனக்கெதற்குத் தலையிறக்கம்? பத்துத் திங்கள் உளைந்துளைந்து சுமந்துயிர்த்துப் பெற்றேன் உன்னை; மனக்கவலை ஏன்கொண்டாய்? உலகம் போற்றும் மதிப்பன்றிப் பழிப்பொன்றும் வாரா துன்பால்; சினக்களிற்றின் மகவுன்னைப் புகழ்வ தல்லாற் சிறிதேனும் எள்ளுதலுக் கிடமே இல்லை.251 பழுதொன்றும் இல்லாமற் புகழே கொண்டு பாராளும் மன்னர்குலம் நீபி றந்த தொழுதகுநற் குலமாகும்; உன்றன் தந்தை தோகைஎனை வெறுத்தெங்குஞ் செல்ல வில்லை; கொழுநரவர் மனம்வெறுக்கும் வண்ணம் நானும் குற்றமொன்றும் மறந்தேனுஞ் செய்ய வில்லை; அழகுதரும் மங்கலநாண் என்க ழுத்தில் அணிசெய்ய வாழ்கின்றார் பகைவர் நாட்டில்.252 |