பக்கம் எண் :

வீரகாவியம்365

பாருலகம் ஏத்துபுகழ் படைத்த வீரன்
      பாலன்எனை இத்தனைநாள் காண வாராக்
காரணமென்? வியப்பன்றோ? ஒருகால் என்றன்
      கவலைக்கு மருந்தாகப் பொய்ம்மை யாக
ஆறுதலை மொழிந்தனையோ? உண்மை சொல்ல
      அறியாயோ? மனமிலையோ? ஈத னைத்தும்
யாருடைய கற்பனையோ? நம்பும் வண்ணம்
      யாதொன்றும் புகலாயோ? அன்னாய்’ என்றான்.257

‘ஈன்றமகன் எனைநம்ப மறுத்து நின்றால்
      எவ்வணந்தான் தெளிவிப்பேன்? உலகில் என்னைப்
போன்றமகள் ஒருத்தியினைக் கண்ட துண்டோ?
      புதல்வனுக்கும் கொழுநனுக்கும் இடையில் நின்றே
ஆன்றதுய ருடையேனாய் ஊசல் போல
      ஆடுகிறேன்; வாடுகிறேன்;’ என்றுள் நைந்து
தேன்றுளியின் அனையஒரு நினைவு தோன்றத்
      தெளிமனத்தள் இளையோன்பால் நவில லுற்றாள்.258

‘கலங்குநிலை கொண்டுழலும் மைந்த! ஒன்று
      கழறுகிறேன் இதனைக்கேள்! கருவில் நீதான்
துலங்குகிற பொழுதத்துன் தந்தை எற்குத்
      துயர்தந்து பிரியுங்கால், மணிகள் மேவி
இலங்குமொரு பொன்னணியைக் கையிற் றந்தே
      எழில்தவழும் வீரமகன் பிறப்பான், அந்த
வலங்கெழுமும் மகவுக்குக் கையிற் கட்டு!
      வலிவுடனே பெரும்புகழும் வாய்க்கும் என்று,259

பலபுகன்றார்; எனைத்தேற்றிப் போரை நோக்கிப்
      பறந்தகன்றார்; அவர்தந்த அணியின் ஓர்பால்
குலமகனாம் தந்தைபெயர் பொறித்தி ருக்கும்;
      கொடுத்தஅணி இதுகொள்க! இதனை என்றும்
விலகலிலாப் பூணாக அணிந்து பேணி
      வென்றிகொண்டு திகழ்க’என மொழிந்து நின்றாள்;
உலகமெலாம் பெற்றான் போல் அதனை வாங்கி
      உவகைமிகக் கையகத்தே அணிந்து கொண்டான்.260