பக்கம் எண் :

366கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 56

படைதிரட்டி மூவகத்தை வெற்றி கொள்வேன்
பரியொன்று வேண்டுமென மைந்தன் கேட்டான்.

‘என்மதலாய்! உனையொன்று வேண்டு கின்றேன்;
      இவ்வுண்மை தனைஎவரும் உணரா வண்ணம்
நின்மனமாம் சிறையகத்து வைக்க வேண்டும்
      நின்னையும்நான் பிரிந்திருக்கச் சிறிதும் ஒவ்வேன்;
வன்மனங்கொள் கனகனுக்கும் நின்தந் தைக்கும்
      வளர்ந்துவரும் குலப்பகைமை நெடுநா ளுண்டு;
நன்மையிலான் பழிவாங்க நினைத்தல் கூடும்;
      நாடோறும் விழிப்புணர்வோ டிருத்தல் வேண்டும்.’261

இவ்வண்ணம் முன்னிகழ்ச்சி அனைத்துஞ் சொன்ன
      ஏந்திழையாள் திருவடிக்கு வணக்கஞ் செய்து,
‘மெய்வண்ணம் என்வரலா றுரைத்த அன்னாய்!
      மேவலர்தாம் நமக்கினிமேல் எவரு மில்லை;
கைவண்ணங் காட்டிடுவேன்; தந்தை போலக்
      களங்களெலாம் போய்ப்புகுந்து வெற்றி கொள்வேன்;
செய்வண்ணம் அறிந்துலகம் புகழும் போது
      தெரியாமல் என்னிலைதான் மறைந்தா போகும்? 262

எத்துணைதான் மறைத்தாலும் என்றன் போக்கால்
      என்றேனும் வெளிப்படுதல் திண்ணம்; காட்டை
நத்துபுலிக் குட்டியின்பால் பூனைப் பண்பை
      நயப்பதனால் பயனில்லை; எனினும் என்றன்
அத்தனைநான் காணும்வரை அடக்கிக் கொள்வேன்;
      அன்னாய்நீ அஞ்சற்க! திட்ட மிட்டே
இத்தரையில் படைதிரட்டி வாகை சூடி
      இணையாரும் இல்லைஎன வாழ்வேன் அம்மா!263