பக்கம் எண் :

வீரகாவியம்367

மறங்செறிந்த நாவலத்து மாந்தர் தம்முள்
      மனவலிமை மிக்காரைத் தேர்ந்தெ டுத்துப்
புறஞ்செறிந்த துறையெல்லாம் பயிற்று வித்துப்
      பூவேந்தர் அஞ்சவரு படைதி ரட்டி,
உரஞ்செறிந்த மூவகத்தைத் தாக்கி, வீரர்
      ஓடோடப் புறங்கண்டு, நாட்டை ஆளும்
திறமிழந்த மன்னவனாம் மதலைக் கோவைச்
      சிறைசெய்து, சொல்லரிய வென்றி கொள்வேன்.264

ஆர்த்தெழுந்த போர்த்திறத்தைத் காட்டிப் பெற்ற
      அரியணையை எனைப்பெற்ற தந்தைக் கீந்து,
சேர்த்துன்னை அவ்வணையில் அமரச் செய்து,
      சேயென்றன் இருவிழியும் களிக்கக் காண்பேன்;
பேர்த்தெழுந்து மூவகத்தின் துணையுங் கொண்டு
      பேரரசன் பெருங்கனகன் படையைத் தாக்கிக்
கார்த்தொகையைக் கலைந்தோடச் செய்ய வல்ல
      காற்றேபோல் கழன்றடித்து வெற்றி காண்பேன்.265

தந்தைஒரு நாடாளத் தன்னே ரில்லாத்
      தனயனொரு நாடாளப் பாரில் எங்கும்
எந்தஒரு பகையுமிலை என்று போற்ற
      இருகதிர்போல் ஒளிசெய்ய ஆட்சி செய்வோம்;
முந்தைவரு மன்னரெலாம் விண்மீன் போல
      மொய்த்திருந்து பணிசெய்ய உலகம் எங்கள்
சிந்தைதரும் குறிப்புணர்ந்தே இயங்கக் காண்பேன்
      சீரெல்லாங் குவிந்தொன்றாய் வயங்கக் காண்பேன்.266

இன்றேநான் என்பணியைத் தொடங்கு கின்றேன்
      ஏற்றதொரு வயப்புரவி எனக்கு வேண்டும்;
குன்றேபோல் களிறனைய வலியும் பெற்றுக்
      கோளரியை விஞ்சுகின்ற வீரங் கொண்டு
நின்றேறிப் பாய்புலிபோற் பாய்ந்து செல்லும்
      நீர்மையெலாம் அப்பரிபெற் றிலங்க வேண்டும்;
சென்றேநான் வென்றிகொளச் சிந்தை கொண்ட
      செயலெல்லாம் நிறைவுபெற வேண்டும்’ என்றான்.267


புறஞ்செறிந்ததுறை - போர்த்துறை. கார்த்தொகை - மேகக்கூட்டம்.