பக்கம் எண் :

368கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 57

பரியினைப் பெற்றஅச் சிறியவன் விரைந்து
பொருபடை திரட்டிப் போர்செய முனைந்தனன்.

ஆடிக்குள் காண்பார்தம் தோற்ற மெல்லாம்
      அவ்வாறே தோன்றுதல்போல் தந்தை சாயல்,
நீடிக்கும் பெருவீரம், செய்கை, பண்பு
      நினைவெல்லாம் அப்படியே ஒக்கின் றானால்;
தேடிக்கண் டின்புறவே தந்தை யின்பால்
      செலநினைந்தான்; இவனைஇனித் தடுப்ப தென்றால்
மூடிக்குள் பெரும்புயலை அடக்கல் போலாம்;
      முயல்கஅவன் வெல்கவென மகிழ்ந்து நின்றாள்.268

பணியாளன் ஒருவனைக்கூய்த் தேர்ந்தெ டுத்த
      பரிபலவுங் கொணர்கவென ஆணை யிட்டாள்;
அணியாக வந்தவற்றுள் ஒன்றும் இந்த
      அடலேற்றுக் கொப்பவிலை; மற்றோர் வீரன்
மணியான பாய்மாவொன் றங்குத் தந்து
      ‘மாவேழன் புரவிக்குப் பிறந்த தாகும்;
இணையாக இதற்கொன்றும் இல்லை’ என்றான்;
      ஏறனையான் மகிழ்ந்ததன்மேல் ஏறிக் கொண்டான்.269

‘என்னையினிப் பொருதுவெல யாரும் இல்லை;
      எவருக்கும் அஞ்சுதலும் இனிமேல் இல்லை;
முன்னிவரும் புரவியிதன் மிசையி ருந்தே
      மூவகத்தை வென்றிடுவேன்; மதலைக் கோவும்
தன்னுரிமை அரசிழப்பன்; எனது நெஞ்சின்
      தணப்பரிய கனவுகளும் நனவாய்த் தோன்றும்
அன்னையுனை வணங்குகின்றேன்’ எனமொ ழிந்தே
      அடல்மிகுந்த படையொன்று திரட்டிச் சென்றான்.270


ஆடி - கண்ணாடி. கூய் - அழைத்து. அடலேறு - வெற்றிக்காளை போன்ற கோளரி. தணப்பரிய - நீங்காத.