பக்கம் எண் :

372கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

‘படைத்தலைமை கொண்டுள்ளீர்! வயந்தர் தந்த
      படைக்குரிய கோளரிதான் யாவன் என்று
படைத்துணர வல்லீரோ? நமது நாட்டின்
      பகைவன்மா வேழனுக்கும் வயந்தன் பெற்ற
இடைக்கொடியள் வேல்விழிக்கும் பிறந்த செல்வன்;
      இதுபிறர்க்கு மறைபொருளா வுள்ள தென்று
கிடைத்துளது செய்தியொன்று; போரில் வேழக்
      கிழவனுக்கு நிகராவான் என்றும் சொல்வர்.275

நமதுபெரும் படைத்துணையும் இன்று பெற்றான்
      நானிலத்தில் எவர்பொரினும் எளிதில் வெல்வான்;
எமனனைய மாவேழன் வாழ்வால் தோல்வி
      ஏலாத மூவகத்தைத் தோற்கச் செய்வான்;
சமர்புரியும் மதலைக்கு வேழன் போலத்
      தனிமதலை இவன்நமக்கு வாய்த்தான்; நல்ல
சமயமிது; இவ்வமரில் நமக்கே வெற்றி
      சார்ந்துவிடும் ஐயமிலை திண்ணம் திண்ணம்.276

தந்தையையும் மகனறியான்; தந்தை யும்தன்
      தனயனைக்கண் டறிந்ததிலை; அதனாற் போரில்
உந்திஎழும் உணர்ச்சியினால் நேரில் மோத
      உடன்றெழுவர்; கிழமகனை வலித்துத் தாக்கி
நொந்துவிழ அவன்மகனே செய்து நிற்பான்;
      நொடிப்பொழுதில் ஆர்ப்பரித்துக்கொன்றுந் தீர்ப்பான்;
எந்தஒரு துயருமிலை மூவ கத்தை
      எளிதாகப் பணிவிப்போம் ஆட்சி கொள்வோம்.277

பின்னர்மகன் உண்மையுணர்ந் தெதிர்க்கு மாயின்
      பெரிதில்லை நமக்கவனை அழித்தொ ழித்தல்;
முன்னமிவர் ஒருவரைமற் றொருவர் தம்முள்
      முறைமையினை அறிந்துகொளா திருப்பி னன்றோ
சொன்னவெலாம் நிறைவேறும்! புரிந்து கொள்ளின்
      தோன்றமரில் சமர்செய்ய வாரார்; நீவிர்
சின்னஒரு துளியேனும் அறியா வண்ணம்
      சின்னவனைச் சூழ்ந்திருத்தல் வேண்டும்’ என்றான்.278


பொரினும் - போர்செய்தாலும். மதலைக்கு - மதலைக் கோமானுக்கு.