பக்கம் எண் :

வீரகாவியம்385

பொரவந்த வெண்கோடன் சிறையுற் றேகப்
      புதுத்தலைமை என்தந்தை பெற்றார் அன்றே;
கரவில்லை; முதியரவர் என்சொற் கேட்பர்
      கன்னிஎன்பேர் மானத்தி என்பர்; நெஞ்சில்
உறவந்த நட்புறவால் என்பின் வந்தால்
      உரியதொரு கோட்டையினை ஒப்ப டைப்பேன்;
பிறகிந்தச் சமரெதற்கு வாவா’ என்று
      பெடைக்குயிலின் இனியகுரல் கொண்டு சொன்னாள். 305

அவளெய்த வில்லம்பு தடுத்து நின்றோன்
      ஆயிழையின் விழியம்பு தடுக்க லாற்றான்;
தவளநகைப் பொலிவுடனே இனிய சொல்லும்,
      தனிநடையும், கொடியிடையும், நயஞ்செ றிந்து
தவழுமொழி வாயழகும், வீரப் போக்கும்
      தறுகணுறுங் கோளரியை வென்று நிற்க,
இவனுமவ ளுடன்செல்ல இயைந்தா னாகி
      எழில்வீரக் குலமகள்பாற் சிலசொல் சொல்வான்.306

‘மறவர்குலப் பூங்கொம்பே! நயந்து சொல்லும்
      மாற்றத்தை நம்புகிறேன்; மாற்றம் செய்யேல்;
சிறகிழந்த பறவைஎன நிற்கு முன்னைச்
      சிறைதவிர்த்தேன் சொன்னசொலைக் காத்தல்வேண்டும்
உறநிவந்த கோட்டையினை அட்டி யின்றி
      ஒப்படைத்துச் சொற்கேட்டுப் பணிதல் வேண்டும்;
பிறழுநிலை தென்படுமேல் எனது சீற்றம்
      பேரழிவைச் செய்துவிடும் எழுக’ என்றான்.307


கரவு - வஞ்சனை, தவளம் - வெண்மை, தறுகண் - அஞ்சாமை. மாற்றம் - சொல், மாற்றம் - மாறுபாடு. உறநிவந்த - மிகஉயர்ந்த.