| 388 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
சினந்துரைத்த மொழியெல்லாம் கேட்ட நங்கை செவ்வாயிற் கலகலெனச் சிரித்து நின்று, ‘தனந்தனியாய் நிற்கின்றோய்! உனது நாட்டில் தனக்குநிகர் இலையென்று தருக்க லாகும்; வனந்திரியும் களிறனையான், எங்கள் நாட்டு வாள்வீரன், படைத்தலைவன், உடன்றெ ழுந்தால் இனந்தெரிய ஒண்ணாமல் உடலைக் கீறி எடுத்தெறிவன் உயிர்தப்பிப் பிழைத்துப் போபோ!313 வென்றுவிட மனப்பால்நீ பருகு கின்றாய்! விளையாட்டுப் பிள்ளையென மறுகி நின்றாய்! குன்றனையான் வெகுண்டெழுமேல் வீர ரெல்லாம் குற்றுயிராய்க் கையிழந்து காலி ழந்து பொன்றுநிலை எய்திடுவர் அந்தோ! நீதான் புறங்கொடுத்து மீள்வைஎனில் உயிர்கள் தப்பும்; சென்றுபிழை’ என்றவளும் எள்ளி நின்றாள்; சினமடங்கல் குமுறலுக்கோர் அளவே யில்லை.314 பெண்ணொருத்தி இகழ்ந்துரைத்த இழிவும், வெற்றி பெறும்நிலையில் மதியிழந்து பிறழ்ந்து காட்டும் கண்ணசைவில் ஏமாற்றங் கொண்ட நாணும், கன்னியவள் சொன்னசொலில் பிழைத்த தாலே உண்ணிவந்து வருசினமும் மாறி மாறி உள்ளத்தை வாட்டுவதால் உழன்ற செம்மல் எண்ணியதை வெளிப்படுத்திக் காட்டு வான்போல் இருவிழியும் கனல்தெறிக்க நோக்கிச் சென்றான்.315
தனந்தனியாய் - தன்னந்தனியாகி. மீள்வை - மீள்வாய். உண்ணிவந்து - உள்நிவந்து - மனத்தில் மேலோங்கி. செம்மல் - தலைமைதாங்கும் கோளரி. |