| 394 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 72 மாவலி சொல்லால் மாறிய கோளரி போர்வலி காட்டப் புறப்பட் டேகினன். படைத்துணைவன் மாவலியன் சூடு தோன்றப் பகர்ந்தவெலாம் செவிபுகுதத் தளர்வு நீங்கி, விடைக்களிற்றின் அனையானோர் முழக்கஞ் செய்தான்; ‘வெம்பகைக்குப் பணிந்திடுமோ வீரத் தோள்கள்! படைக்கலங்கள் மோதட்டும்; போர்க்க ளத்தில் பகைவருடல் வீழட்டும்; பார்த்த லத்தில் முடைக்குருதி ஓடட்டும்;’ எனப்ப கர்ந்து முறுவலன்பல் நறநறெனக் கடித்து நின்றான்.326 ‘நாவலத்துக் கோளரியின் வீரம் வாழ்க! நமைக்காக்கும் பெருங்கனகன் கொற்றம் வாழ்க! மேவலர்க்குப் பணியாத திண்டோள் வாழ்க! மிடலுடைய மறவர்குலம் வாழ்க’ என்று நாவகத்துப் பெருமுழக்கஞ் செய்து வீரர் நடைவகுத்துப் படைத்துணைவர் சூழச் சென்றார்; காவகத்துக் கொடுவிலங்கின் கூட்ட மெல்லாம் கடுகிஒரு வழிநடந்த தென்னச் சென்றார்.327 |