இயல் - 73 வெண்கோட்டை நகர்த்தலைவன் விட்ட ஓலை விரித்தொருவன் படித்திருக்க மன்னன் கேட்டான். வெண்கோட்டைக் கஞ்சுகத்து மறவன் வந்து வேத்தவையில் மதலைக்கோ தாள்ப ணிந்து மண்போற்றும் மானத்தி தந்தை தந்த வரைமுடங்கல் தந்திருக்க, வேந்தன் அங்குக் கண்காட்ட அதுபெற்ற ஓலை நாய்கன் காவலன்முன் அவையத்துப் படிக்க லுற்றான்; ‘பண்போற்றும் புகழ்வேந்தே! வணக்கம்; உண்மை பகர்கின்றேன் சினவாமல் செவிதந் தாய்க!328 துளியேனும் அச்சமிலாச் சிறிய வீரன் தோற்றத்தில் அரியேற்றை நிகர்க்கும் செம்மல் விளிவேதும் அறியாத படைதி ரட்டி வெண்கோட்டை பற்றுதற்கு முற்றி யுள்ளான்; அளிவாழும் மலர்மாலைக் கனகன் தந்த அணிவகுத்த பெரும்படையும் துணையாக் கொண்டான்; எளியேனைப் பொறுத்தருள்க! ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கின்றேன் துணையே யின்றி.329 வயந்தநகர்ப் பெருவீரன் தனித்துச் செய்யும் வாட்போரில் முன்னிற்க எவரும் இல்லை; நயந்திருக்கும் அவனுருவம் ஆற்றல் எல்லாம் நம்நாட்டு மாவேழன் தனைநி கர்க்கும் வயல்கொழிக்கும் வெண்கோடன் போரில் தோற்று வலிவிழந்து சிறைப்பட்டான் என்றால் பாரோர் வியந்திருக்கும் பெருவீரன் வலிமை எல்லாம் விளம்புதற்கு யார்வல்லார்? எவரு மில்லை!330
முடங்கல் - ஓலை. ஓலைநாய்கன் - அரசனுடைய கடிதப்போக்கு வரத்து அதிகாரி. விளிவு - அழிவு, அளி - வண்டு. வயம் - வெற்றி. |