பக்கம் எண் :

வீரகாவியம்397

இயல் - 74

வேழனை அழைத்து விரைவினில் வருகென
ஆளினை மன்னன் அனுப்பினன் துடித்தே.

முடங்கல்தரும் செய்திஎலாம் படிக்கக் கேட்டு
      முனிந்தெழுந்த மதலைக்கோ, எதிர்த்து வந்த
அடங்கலரை ஒழிப்பதினி எவ்வா றென்றே
      அமைச்சர்படைத் தலைவரையும் வினவி நின்றான்;
‘மடங்கலினை நிகர்ப்பானை அடக்க வேண்டின்
      மாவேழன் ஒருவன்தான் தக்கான் என்றார்;
தடங்கலின்றி வலிமைமிகு வேழன் இன்று
      தண்டலத்தில் உறைகின்றான்’ என்று சொன்னார்.332

மாமன்னன் தூதுவரை விரைந்து கூவி
      மாவேழற் கொணர்கஎனப் பணித்து நின்று,
‘கோமன்னன் நாவலத்தான் போர்தொ டுத்தான்;
      குமரனொரு சிறுமகனே தலைமை பூண்டான்
நாமன்னும் வெண்கோட்டை பற்றிக் கொண்டான்;
      நல்வலிமைக் கோடனையும் சிறையில் வைத்தான்;
ஏமன்னும் வில்லானுக் கெல்லாம் சொல்லி
      இப்பொழுதே கொணர்க’வென ஏவி விட்டான். 333


அடங்கலர் - பகைவர், மடங்கல் - சிங்கம், தண்டலம் - வேழன் ஊர். ஏ - அன்பு.