நாடுனது தோள்வலிமை நாடுங் காலை நமக்கென்ன எனவிருத்தல் நலமோ ஐய! கேடுளத்தில் அறியாத மன்னன் உன்னைக் கிளந்ததனை மனத்திருத்தும் நேரம் ஈதோ? ஈடுலகில் எவருமிலர் எனப்பு கழ்ந்த எம்வேழன் உயிருடனிங் கிருக்கும் போது நாடுரிமை யிழந்தடிமை யாதல் நன்றோ? நண்ணாரும் இகழ்ந்துரைக்க வாழ்தல் நன்றோ?337 காலமினித் தாழ்த்துவிடின் கொடிய மாற்றார் காலடியில் வீழ்ந்துவிடும் நமது நாடு; ஞாலமுனை எள்ளிநகை யாடு மன்றோ? நாளொன்று போவதெனின் நாடு பாழாம்; கோலமொடு வேலைஎடு! கூற்ற மென்னக் கோலைஎடு! வாளைஎடு! கவசம் தாங்கு! வாலமொடு வருவோனைத் தொலைக்க வாவா! வாளுக்குந் தோளுக்கும் விருந்து கிட்டும்.’338
கிளந்ததனை - சொன்னதை. வாலம் - சுட்டித்தனம். |