பக்கம் எண் :

வீரகாவியம்401

இயல் - 77

சிறுவன் அவனெனச் சிந்தையின் இகழ்ந்தோன்
உறுபகல் நான்கு விருந்தயர்ந் தேகினன்.

‘தென்புறத்து மூவகத்தைச் சிறிதென் றெண்ணிச்
      சிறுமகனோ தாக்குதற்கு சீறி வந்தான்?
வன்புயத்து மாவேழன் வயமா வீரன்
      வாழ்கின்றேன் எனும்நினைவை மறந்தான் போலும்!
முன்பெடுத்த போரிலெலாம் முதுகு காட்டி
      மூச்செறியத் தோற்றோடிச் சென்றி ருந்தும்
பின்பெதற்குச் சிறியவனை அனுப்பு கின்றான்?
      பெருங்கனகன் ஆட்சிக்கு முடிவு போலும்!’341

எனப்பலவும் தன்னுளத்து நினைந்த வேழன்
      இயம்பவரும் தூதுவனை இனிது நோக்கி,
‘மனக்கவலை விட்டொழிக! போர்தொ டுத்த
      மைந்தனொரு சிறுவனென மொழியா நின்றாய்;
தனக்கெனவோர் வலியில்லா வேந்தன் இந்தத்
      தகையறியாச் சிறுவனுக்கோ எனைய ழைத்தான்?
நினைத்தெழின்நான் செருக்கடக்கி அவனை வீழ்த்த
      நெடும்பொழுதா வேண்டும்? நொடிப்பொழுதே போதும்!342

விருந்துண்டு களிப்போம்வா! இவனை மோதி
      விளையாட்டாக் கொல்வ’னென எண்மை யாகப்
பருந்தனைய நோக்குடையான் பகர்ந்தி ருந்தான்;
      பரியேறி வந்தமகன் வருந்திச் சொல்வான்,
‘பொருந்தொழிலோய்! விருந்துண்ணும் நேரம் அன்று!
      போர்தொடங்கும் முன்பாக விரைதல் வேண்டும்;
நிறைந்தபுனல் வருமுன்பே அணைகள் கோலி
      நிறுத்துவதே கடனாகும்’ என்றான் வீரன்.343


எண்மை - எளிது, கோலி - கட்டி