பொங்காமல் பொங்கிவரும் சீற்றங் கொண்டு புரிந்தெழுந்து கைப்பற்ற நான்நி னைத்தால் செங்கோலும் மணிமுடியும் நீய மர்ந்து சீரிழந்த அரியணையும் என்பாற் சேரும்; வெங்கோல! அரசிருக்கை கொள்ளும் ஆசை விளைகின்ற தினையளவும் என்பால் இல்லை; இங்காளும் அரசர்க்குப் பணிந்து போதல் என்போன்றார் கடமைஎன அடங்கி நின்றேன்.351 முரசறைந்து போர்தொடுத்துப் பகைவன் வந்து முறுக்குங்கால் ஆற்றாமல் தோல்வி கண்டே அரசிழந்து நாடிழந்து செல்வம் நீங்கி அடவிதனில் கோவூரன் அலையுங் காலைப் பொரநினைந்தவ் வூரனுக்குச் சார்பாய் நின்று புகுந்தபகை கெட்டொழிய வாகை சூடி அரிநிவந்த இருக்கையினை அவனுக் கீந்தே அணிமுடியும் கவித்ததைநீ அறியாய் கொல்லோ?352 நீயணியும் இம்முடியும் நிலைத்த தைத்தான் நினைந்தின்று சிறிதேனும் பார்த்தா யல்லை; பேயனைய வெண்பூதன் பகைமை கொண்டு பெரும்படையா லுனைஎதிர்த்தான்; அந்த நாளில் தீயனைய சினமூண்டு செருக்க ளத்துச் சேர்ந்திலனேல் பூதனுக்கோர் இரையா யன்றே போயழிவை; எண்ணுகிலா ததும றந்தாய்; புன்மைகளும் எனக்கிழைக்கத் துணிந்தாய் இன்றே!353 பன்முறையும் நாவலத்துப் பகையை வென்றேன் பார்காத்தேன் தாய்நாட்டுப் பற்றால் மன்னா! புன்மொழிகள் பலபொறுத்தேன் அதனா லன்றோ புழுவெனநீ நினைந்துசிறை செய்க என்றாய்! நன்மைஎது வரினுமுன தவையில் நில்லேன்; நன்றிக்குச் சிறிதேனும் தொடர்பே யில்லாய்! வன்பகைவன் சூழ்கின்ற வேளை நீயே வாளெடுபோ போர்தொடுநீ செல்வேன்’என்றான்.354
கோவூரன் - வேழனால் முடி பெற்றவன் |