பக்கம் எண் :

406கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் 80

வெகுண்டுசெலும் வேழன்பால் நம்பி என்பார்
விரைந்தணுகி அவன்சீற்றம் மாற்றி நின்றார்.

வெகுண்டெழுந்த மாவேழன் பயணம் ஆனான்;
      வேத்தவையிற் சான்றோராம் நம்பி என்பார்
தகுந்துணைவர் மனங்கலங்கி வேந்தற் சார்ந்து;
      ‘சற்றேனும் மதியிலைநின் செய்கை தன்னில்;
புகும்பகைவன் எதிர்நிற்க எவரே உள்ளார்?
      புலமின்றி வேழனுளம் நோகச் செய்தாய்!
நகுஞ்செயலே செய்தனை நீ ஒல்லை யிற்போய்
      நன்மொழிகள் புகல்க’வென இடித்து ரைத்து,355

விரைந்துசெலும் வேழன்பால் ஓடி நின்று
      ‘வீரருக்குள் முதல்மகன் நீ; வெற்றிச் செல்வன்!
கரைந்துமனம் இரங்குதலே கடமை; வேந்தன்
      கரைந்ததனைப் பொருட்டாகக் கருதல் வேண்டா!
நிறைந்தமதி யுடையவனோ நினது மன்னன்?
      நீயறியாய் அவன்நிலையை? ஓர்த லின்றி
இரைந்துசில உளறுவதும் வெகுட்சி நீங்கின்
      இனியபல கழறுவதும் உடையான் அன்றோ?356

அனையனுரை கேட்டுளத்தில் புலந்து செல்லின்
      அறிவுடைய நினக்கிதுதான் அழகோ? நாட்டை
முனைநுனியில் விடுப்பதுதான் முறையோ? உன்னை
      முழுமையுடன் நம்புமெமைத் தவிக்கச் செய்தல்
தினையளவும் நலமாமோ? நீயே யன்றித்
      தெறுபகையை எதிர்க்கவலார் யாரோ உள்ளார்?
எனையுணர வல்லாய்நீ! வீர ரெல்லாம்
      இறந்தொழியக் கருதினையேல் செல்க இன்றே!357


கரைந்து - உருகி. கரைந்ததனை - சொன்னதை