மன்னவன்பால் வெறுப்புற்ற ஒன்றால் வேழன் மாற்றலர்க்குத் தாயகத்தை விட்டான் என்று சொன்னமொழி கேட்பதற்கோ செவிகள் கொண்டேன் சூரனினும் உயிருடனே வாழும் போதோ பன்னரிய புகழ்நாடு பணிதல் வேண்டும்? பாரெல்லாம் வென்றவன்தான் வேழன் இன்று முன்னமரில் போர்செய்ய வலிமை யின்றி முதுமைநிலை எய்தினனென் றுலகம் சொல்லும்.358 தாயகத்துப் பற்றிருப்பின் நினது சீற்றம் தணிந்தெழுந்து செருமுகத்துச் சீறிச் செல்க! போயகத்து வாழ்வதொன்றே குறியாம் என்றால் புலம்பிவரும் என்மொழியை மீறிச் செல்க! காயமுற்ற எழில்முகத்து வேழன் சென்ற களமெல்லாம் வென்றுவந்தான் இன்றோ எங்கள் சீயமொத்த சிறுமகற்கே அஞ்சி விட்டான் சென்றுவிட்டான் என்றுலகம் தூற்றும்’ என்றார்.359
புலந்து - ஊடி, முனை - போர்முனை. |