பக்கம் எண் :

வீரகாவியம்411

இயல் - 83

பாசறைகள் இருபாலும் அமைந்த பின்னர்ப்
பகைப்புலத்துள் மாற்றுருவில் புகுந்தான் வேழன்.

படையனைத்தும் திரட்டியணி வகுத்து நிற்கப்
      பணித்துப்பின் தன்னாட்டுக் கொடியை நாட்டித்
தொடையுடுத்த மலர்மார்பன் அரிமா வன்ன
      தோற்றத்தன் முறுவலன்போர்க் கொடிஎ டுத்தான்;
நடைதொடுத்த மூவகத்துப் படைஞ ரெல்லாம்
      நாவலத்துப் படைக்கெதிரிற் சற்றே அப்பால்
படைதொகுக்கும் பாசறைகள் பலவ குத்துப்
      பாராளும் மதலையனைச் சூழ்ந்து நின்றார்.365

இரவரசி நல்லாட்சி புரியுங் காலை
      ஏறனைய மாவேழன் அணுகி வந்து,
‘புரவலனே! முரசறைந்து செருக்க ளத்துப்
      புகுமுன்னர்ப் பகைவலிகண் டறிதல் நன்றாம்;
உரமுடைய இளவலையும் நேரிற் காணல்
      ஒருவகையிற் பயனுடைய செயலே யாகும்;
கரவுடையில் பகைமுனையிற் சென்று நானே
      கண்டறிவல் விடைதருக’ எனமொ ழிந்தான்.366

திண்டோளன் திறலெல்லாம் மதலைக் கோமான்
      தெளிந்துணர்ந்தான் எனினுமவன் தனித்துச்செல்லின்
கண்டாரும் துயர்விளைக்க நேரும் என்று
      கலங்கினனாய்த் ‘துணையின்றித் தனித்துச் செல்வோய்!
வண்டாரும் பூஞ்சோலை யன்று வீர!
      வட்கார்தம் உறைவிடத்துச் செல்லு கின்றாய்!
பண்டாளும் செருக்கின்றி விழிப்போ டேகிப்
      படைத்தலைவ! வருக’வெனப் பணித்தான் மன்னன்.367


தொடை - மாலை. நடை - போர்ப்பயிற்சி. கரவுடை - மாற்றுடை. அறிவல் - அறிவேன். வட்கார் - பகைவர்,