பக்கம் எண் :

வீரகாவியம்413

இயல் - 84

மறைந்துவரும் வேழனைஓர் வீரன் கண்டு
மனம்நோக உரைத்ததனால் கொன்று மீண்டான்.

வலப்பக்கம் இளவேலன் மெய்காப் பாளன்
      வருமுறவின் முறைபூண்டான் அமர்ந்தி ருக்க,
மலைப்புக்குத் துணைவந்த படைந டாத்தும்
      மாவலியும் தடவலியும் இடத்தி ருக்க,
நலத்தக்க முறுவலனும் நடுவி ருக்க,
      நயந்துபல மொழிந்திருக்குங் காட்சி கண்டான்;
‘குலத்துக்கண் தோன்றிவரும் தோன்ற லுக்குக்
      கூறவரும் உவமையிலை எனப்பு கழ்ந்தான்.369

பாசறையின் வெளிப்புறத்தில் மறைந்தொ துங்கிப்
      பதுங்கிவரும் ஓருருவின் சாயல் மட்டும்
பேசலுறும் இளவேலன் விழியில் தோன்றிப்
      பின்வாங்கக் கண்டுளத்தில் ஐய முற்று,
வாசலில்வந் தங்குமிங்கும் நோக்கி, எந்த
      மாந்தனையும் காணாது மீள்வோன் சேணில்
வீசுமொளி விளக்கொன்றால் உருவின் சாயல்
      விரைவதுகண் டுளவறிவோன் எனநி னைந்து,370

‘மறைந்தஞ்சிப் பதுங்கிவரும் வீரன் யாவன்?
      மறமிருப்பின் எதிர்நிற்க வெளியில் நீவா!
கரந்திருக்கும் கோழைஎனில் பேசா தின்னே
      கடிதில்விரைந் தோடிவிடு! பேதாய்’ என்றான்;
நிறைந்தவலி வேழனுக்குக் கோழை என்ற
      நெடுமொழிஓர் நெருப்பாகிச் சுடலும் தாவி
அறைந்தவனை மார்பகத்து மோதித் தாக்க
      அப்பொழுதே இளவேலன் சாய்ந்து வீழ்ந்தான்.371


மலைப்புக்கு - போருக்கு, சேணில் - தொலைவில், சாயல் - நிழல்.