பக்கம் எண் :

வீரகாவியம்415

இயல் - 85

மன்னவன்பால் கோளரியை வியந்து வேழன்
மாற்றலனைப் புனைபெயரால் பொருவேன் என்றான்.

மீண்டுவரும் மாவேழன் பகைப்பு லத்தில்
      விளைந்தவெலாம் அரசனுக்கு விளம்பிப் பின்னர்,
‘ஆண்டுவரும் மாமன்னா! வந்த ஏந்தல்
      அடலேறு படுநடையன், அழகன், வீரன்;
ஆண்டவனைப் பொருவதெனில் அரிய ஒன்றே!
      ஆயினும்நம் அணித்தலைவர் பொருத பின்னர்
வேண்டுமெனில் அமர்புரிய வருவேன் நானே;
      வேறுபுனை பெயரோடு பொருது வெல்வேன்.374

படைகொண்டு வந்தவனோர் இளைஞன்; அந்தப்
      பாலனொடு மாவேழன் பொருதல் நன்றோ?
விடைவென்ற தோற்றத்தன் என்பேர் கேட்பின்
      வெலவெலத்துப் போராண்மை காட்டா தேகும்;
நடைகொண்டான் அஞ்சுமெனில் அவனு ளத்தே
      நல்வீரம் அணுவளவும் தோன்றா தன்றோ?
தடையின்றி அவன்திறமை முழுதுங் காட்டிச்
      சமர்செய்ய வேண்டுமென எண்ணங் கொண்டேன்.375

சிறுவீரன் பெருவீரங் காட்டிக் காட்டிச்
      செயிர்த்தெழுந்து புரிகின்ற கோல மெல்லாம்
உறுபோரிற் கண்ணாரக் காணல் வேண்டும்;
      உள்ளமெலாங் களிகொண்டு பொங்க வேண்டும்;
கறுவோடு பொருதவன்தன் ஆண்மை எல்லாம்
      காட்டியபின் நான்வெல்லும் ஆசை யாலே
மறுபேரால் பொரநினைந்தேன்; மாற்றான் வீரம்
      மதிக்கின்ற பெருங்குணமும் வேண்டும் அன்றோ?’376


ஆண்டவனை - ஆண்டு + அவனை; ஆண்டு - அங்கே, விடை - காளை. செயிர்த்து - கோபித்து, கறு - கோபம்.