பக்கம் எண் :

வீரகாவியம்417

இயல் - 86

மாவேழன் பாசறையை வினவி நின்ற
மகன்றனுக்கு வெண்கோடன் மறைத்துச் சொன்னான்.

சிறையிலுறும் கோடனைத்தன் னுடன்கொண் டேகிச்
      சேணுயரும் அரங்கேறிச் செம்மல் நின்று,
நிறைகளிறு சூழவுயர் பாடி வீடும்,
      நெருங்கியதன் வலப்பாலே நிமிர்ந்து நிற்கும்
திரைவளையும் பாசறையும், அப்பால் ஓர்பால்
      செந்நிறத்த படைவீடும், சுட்டிக் காட்டிக்
‘குறைவறவே எவ்வெவர்தங் கூட மென்று
      குறித்தெனக்கு விளங்கவுரை வீர இன்றே!378

விடுதலைநீ வேண்டுதியேல் இதனைக் கூறு!
      விலங்ககற்றி உனைவிடுப்பேன்’ என்றா னாக,
‘நெடுமுடியின் மதலைக்கோன் தங்கும் பாடி
      நீள்மருப்புக் களிறுபல சூழ்ந்த தாகும்;
அடுதொழிலோன் பெருவீரன் வேங்கை என்பான்
      அதன்வலப்பால் தங்கியுளான்; அமைச்சன் சான்றோன்
கெடுதலையே அறியாதான் நம்பி என்போன்
      கெழுமுவது செந்நிறத்த கூடம்’ என்றான்.379

‘கொடியுயர்த்தி ஆங்குளதே பச்சை வண்ணக்
      கொட்டிலங்கே வைகுபவன் யாவன்?’ என்ன,
‘அடிபிடித்துச் சீனத்தன் தந்து சென்ற
      அரியதொரு கூடாரம் ஆகும்; அங்குக்
குடியிருக்கும் வீரன்பேர் நினைவி வில்லை;
      கொடுங்கூற்றம் அனையனவன்’ என்று சொன்னான்;
படிறுரைக்க முனைகின்றான் இவனென் றையம்
      படருவதால் பைப்பயநாம் அறிவம் என்று,380


கோடன் - வெண்கோடன், சேண்உயரும் - மிகவுயர்ந்த. செம்மல் - கோளரி. படிறு - பொய்