பக்கம் எண் :

வீரகாவியம்419

இயல் - 87

வெண்கோடன் மறைக்கின்ற குறிப்பைக் கண்டு
விடலையவன் பரியேறிச் சென்றான் அங்கே.

நம்பகிலாக் கோளரியன் சிறித தட்டி
      ‘நயவஞ்சம் மொழிந்திடுவோய்! உண்மை கூறின்
வம்புபடும் கலன்பலவாய்ப் பரிசில் கிட்டும்;
      வாய்மறைத்தால் நின்னுயிரே போகும்’ என்றான்;
‘அம்புவிடு இப்பொழுதே! நின்பாற் சிக்கி
      அலமருமென் னுயிர்போக அஞ்ச கில்லேன்;
வெம்புலியன் மாவேழன் பிழைத்தாற் போதும்;
      மேவலர்பால் தாயகத்தைக் காப்பேன்’ என்றான்.383

தந்தைபெயர் சொலக்கேட்டு நின்ற மீளி
      தனிப்பகைவெண் கோடனுக்கோர் தீங்கும் செய்யான்,
உந்திவரும் ஆர்வத்தால் கவசம் பூண்டோன்
      ஒப்பரிய வில்லேந்தி வாளுந் தாங்கி,
முந்திவரும் நடைப்புரவி ஏறி, நண்ணார்
      முனைப்புலத்துப் பசியநிறப் பாடி நோக்கும்
சிந்தையொடு மிகவிரைந்து சென்றான் நேரில்
      சென்றங்கு மெய்ம்மையெலாம் தெரிவான் வேண்டி.384


வம்பு - புதுமை, கலன் - நகை, மீளி - கோளரி.