இயல் - 89 அறைந்தனன் ஏவலன் அரசன் ஆணை விரைந்தனன் பரிமேல் இவர்ந்திடும் வேழன். கடிதினுனை வரப்பணித்தான் மன்னன் என்று காவலன்வந் துரைத்ததனைக் கேட்டு வேழன், ‘முடிபுனையும் ஒன்றன்றிச் சிந்தித் தாயும் முன்னறிவு சற்றுமிலான்; செய்த பின்னர்த் துடிதுடிப்பன், எனையழைப்பன்,என்றும் ஈதே தொழிலானான், எனமுனகிப் புறத்தே வந்தான்; படைமறவர் வெருண்டோடித் தவிக்கக் கண்டு பரிமாவைச் சீற்றமொடு துரத்தி வந்தான்.387 போராற்ற வல்லாரும் அவனைக் கண்டு புறங்காட்டி ஓடுகின்றார் நில்லார் என்றால் பேராற்றல் கொண்டானைத் தவம்பு ரிந்து பெற்றானே பெற்றானென் றுண்ம கிழ்ந்து பாராட்டி வருவேழன் றன்னை நோக்கிப் பகருமொரு படைமறவன், ‘ஆண்மைப் பண்பே நேராற்ற வந்ததுபோல் ஒருவன் ஆங்கே நிற்கின்றான் விழிப்புடன்நீ செல்க’ என்றான்.388 |