| 422 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 90 தனயனும் தந்தையும் தரியல ராகி முனைந்து பொருதனர் முதல்நாட் போரில் வாளெடுத்த நாள்முதலா வெற்றி யென்ற வரலாறே கற்றுயர்ந்த வேழன் இன்று, தாளெடுத்து வைக்கின்ற சிறும கற்கோ தளர்ந்தொதுங்கிப் பின்செல்வன்? எதிரில் வந்த கேளெடுத்து மொழிந்ததைஓர் பொருட்டாக் கொள்ளான் கிளந்தவனை நகைத்தெள்ளி விரைந்து சென்றான்; வேளெடுத்த கோளரியும் தன்னை நோக்கி விரைந்துவரும் வீரனைக்கண் டுவகை கொண்டான்.389 களிறொன்று பிளிறுதல்போல் ஒருவன் ஆர்த்தான்; கடுஞ்சீயம் உறுமுதல்போல் சிறுவன் ஆர்த்தான்; ஒளிறுபெறும் வாளெடுத்துத் தனித்துச் செய்யும் ஒருசமரே தொடக்குதற்கு முனைந்து நின்று களிறனைய பெருமகனும் கடுங்கட் சீயம் கடுக்கவரும் ஒருமகனும் பொருத வந்தார்; நளிருடனே பொரவருவோர் தம்முட் கொண்ட நல்லுறவு யாதென்றே அறியார் அந்தோ!390
கேள் - உறவினனாகிய வீரன், வேள் - மன்மதன், ஒளிறு - விளங்குகின்ற. சீயம் - சிங்கம், கடுக்க - ஒப்ப நளிர் - பகை. |