இயல் - 91 ஒருவரை ஒருவர் உணரா தெதிர்ந்தவர் உருவையும் பொலிவையும் உவப்புடன் வியந்தனர். பொருதொழிலைத் தொடங்குமுனம் களத்து நின்று புதுவதுபோல் ஒருவரைமற் றொருவர் பார்த்தார்; ஒருபெரிய வடிவமொடு நிமிர்ந்து நிற்கும் உருக்குடலும் துதிக்கையெனத் திரண்டு ருண்ட இருபெரிய நெடுங்கையும், பரந்த மார்பும், எழுகதிர்கள் இரண்டனைய விழிகள் தாமும் குருமருவு விரிநுதலும்,ஒளிமு கத்தில் குவிந்தடர்ந்த சுருளணலும் இளைஞன் நோக்கி,391 கண்டாலும் நடுக்குறுத்தும் தோற்றங் கொண்ட களிறனையான் இவனன்றோ வீரன் ஆவான் திண்டோள்கள் கொண்டிவனைப் பொருது வென்ற திறலன்றே திறலாகும்; தோல்வி ஒன்று கண்டாலும் குற்றமில்லை; என்பே ராற்றல் காட்டுதற்குத் தக்கானும் இவனே யாகும்; விண்டாலும் இவன்தோற்றப் பெருமை எல்லாம் விரித்துரைக்க இயலாது விளைந்து நிற்கும்;392 எனவியந்த கோளரியன் மனத்த கத்தே இவனொருகால் தன்தந்தை வேழன் தானோ? எனநினைந்தான்; அவன் அணியும் கவச மில்லை; இவன்வேறு பிறன்போலும் எனத்தெ ளிந்தான்; கனவகத்தும் இவனைப்போற் கண்ட தில்லை; கற்பனைசெய் தாயினும்நான் பார்த்த தில்லை இனையபல வியந்தெண்ணி, ஆவ தாக! எனக்கரிய வாய்ப்பொன்று கிடைத்த தென்றான். 393
குரு - ஒளி. நுதல் - நெற்றி. அணல் - தாடி, விண்டால் -சொன்னால். |