பக்கம் எண் :

ஊன்றுகோல்105

சமயத்துத் துறையிலவர் தலைமை பூண்டார்
       தமிழ்த்துறையில் மணிப்புலவர் தலைமை பூண்டார்;
இமயத்துப் புகழ்முடியில் நிற்கும் அந்த
       இருதலைவர் தலைக்கூடி மகிழ்ந்த அந்த
அமையத்துத் தலைமையெலாம் மறந்து போனார்
       அடியவர்க்குள் அடியவராய்த் திளைத்தி ருந்தார்;
இமைமுற்றும் விழிமலர்கள் பனிப்ப நின்றார்
       எழுமன்புக் கடைக்குந்தாழ் இல்லை யன்றோ? 8

ஆன்றமைந்து தலைமைபெறும் பெரியார் தம்முள்
       ஆணவமோ தலைச்செருக்கோ அரும்பா தன்றோ?
சான்றவர்கள் தலைக்கூடும் பொழுது தம்முள்
       தலைவணங்கி மற்றவரை மதித்து நிற்பர்;
ஏன்றபிற தகுதியெலாம் மறைந்து நிற்கும்
       ஈருளத்தும் எழுமுணர்ச்சி ஒன்றே நிற்கும்;
போன்றவரில் லாத்தலைவன் தலைவி கூடும்
       பொழுதத்துப் பிறமறைந்தன் பொன்றே தோன்றும். 9

தன்மானங் கருதாமல் இனத்தின் மானம்
       தமிழ்மானம் இவையிரண்டுங் கருதல் ஒன்றே
பொன்மாலை, புகழ்மாலை, மலர்ந்து தோன்றும்
       பூமாலை சூடுகிற தலைமைப் பண்பாம்
தன்காலை வருடிவரும் சிலரைக் கொண்டு
       தருவிலையாற் பெறுவதுவா தலைமை யாகும்?
எந்நாளும் தன்னைவியந் தணியா தென்றும்
       எவரிடத்தும் பணிவதுதான் பெருமை யாகும். 10

இருவருமே தமிழுணர்ந்தோர் குறள்ப யின்றோர்
       இயல்புடையோர் தமிழ், சைவம் என்று சொன்னால்
உருகுகிற மனமுடையோர் அதனால் நெஞ்சத்
       துணர்ச்சியெனும் கொடுமுடியில் நின்றி ருந்தார்;
ஒருவருடன் ஒருவர்விழி கொண்டு பேசி
       உவகையினால் உள்ளத்துள் மாறிப் புக்கார்
உருவமது வெவ்வேறு பெறினும் அங்கே
       உள்ளங்கள் ஒன்றாகி மகிழ்தல் கண்டோம். 11