பக்கம் எண் :

ஊன்றுகோல்115

நலமிகுந்த தீங்கனியின் சுவைநு கர்ந்து
       நாடெங்கும் புள்ளினங்கள் பாடி நிற்கும்;
உலவிவருந் தென்றல்பல நன்ம ணத்தை
       உடனேந்தித் திசையெங்கும் பரவி நிற்கும். 19

நலம்மிகுந்த சான்றோராய் இவர்பாற் கற்றோர்
       நாவலராய் எண்ணிலராய் விளங்கு கின்றார்;
புலமையெனுங் கடலுக்குள் முழ்கி மூழ்கிப்
       புதுப்புதுநன் முத்தெடுத்து மக்கட் கீந்து
குலவிவரும் துணைவேந்தர்,2 ஒளியால் மேன்மை
       கொண்டிலங்கும் மாணிக்கம் ஒருவர் ஆவார்
உலையிலவிழ் பதம்பார்க்கப் பானைச் சோற்றுக்
       கொருசோறு போதாதோ? போதும் போதும். 20

வகுப்பிலே பாடஞ் சொல்லி
       வந்தபின், இல்லை நோக்கி
உகப்புடன் வருவோர் வேண்டும்
       உயரிய நூல்கள் சொல்லும்
மிகப்பெருந் தகைமை யாளர்;
       மேம்பாடு தமிழுக் காக
வகுத்திடும் நேர மெல்லாம்
       வாழ்பயன் என்றே கொண்டார். 21

தம்முழைப் பயில்வார் யாரும்
       தாம்பெறு பிள்ளை யென்றே
அன்புற அணைத்துச் செல்வார்
       1அப்பனென் றழைத்து நிற்பார்;
வம்மினோ நீவிர் இங்கு
       வளர்புகழ் பெறுதல் வேண்டின்
நும்முளே பெற்ற இன்பம்
       நுவல்தரப் பயில்க என்பார். 22


2 டாக்டர் வ.சுப. மாணிக்கனார்
1 மாணவரை அப்ப னென்றழைப்பது பண்டிதமணிக்கு வழக்கம்.