பக்கம் எண் :

ஊன்றுகோல்117

11
பொதுப்பணிபுரி காதை

இயலுண்டாம் இசையுண்டாம் கூத்தும் உண்டாம்
       இனியதமிழ் மொழியிடத்தே என்பர் மேலோர்
மயலுண்ட அறிவுடையார் கூடி யிங்கு
       மறுப்புரைத்தார் இசையில்லை தமிழில் என்றே;
அயல்மொழிக்கே உரியவராய் அம்மொ ழிக்கே
       அடிமைகளாய் இருப்பவர்தம் கூற்றே யாகும்;
செயல்மறந்து தமிழ்மாந்தர் உறங்கும் போது
       திருடவரும் கயவருக்கு வேட்டை தானே. 1

தோற்கருவி துளைக்கருவி நரம்பு கட்டித்
       தொடுகருவி வெண்கலத்துக் கருவி என்று
நாற்கருவி கண்டவர்நாம்; பாடு தற்கு
       நன்மிடறும் ஒருகருவி யாகும் என்றோம்;
ஏற்கமதி யிலராகி வஞ்ச நெஞ்சர்
       இசையிலையே தமிழ்மொழியில் என்று சொன்னார்;
வேற்கருவி எடுத்தெம்மைச் சாய்ப்ப தற்கு
       விலாவிடையே பாய்ச்சுதல்போற் கேட்ட தம்மா. 2

இறைவாழுங் கோவிலுக்குள் உரிமை யில்லை
       இசையரங்கில் திருமணத்தில் உரிமை யில்லை
துறைதோறும் தமிழ்மொழியின் உரிமை வேண்டித்
       தொடருங்கால் மொழிவெறுப்பு, பசுமை என்று
பறைசாற்றும் புல்லுருவிக் கூட்ட மொன்று;
       பழமரத்தில் அதுவளர விட்டு விட்டோம்;
நறைவாழும் மலரிருக்கக் கள்ளிப் பூவை
       நாடியதால் நாம்பெற்ற பலனைப் பாரும். 3