பக்கம் எண் :

120கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

“பண்ணமைத்த தேவாரப் பாடல் கேட்டால்
       பரமனுக்கும் நெஞ்சுருகும்; செவிம டுத்தோர்
எண்ணத்தை நெக்குருக்கும்; இராம லிங்கர்
       இயற்றியநல் லருட்பாடல் தேனும் கைக்கும்
வண்ணத்தை உருவாக்கும்; அயன்ம தத்தில்
       வருவேத நாயகனார் வழங்கும் பாடல்
கண்ணொத்த சமரசத்தைப் படைத்துக் காட்டும்;
       கனியிருக்கக் காய்கவர்தல் மடமை யன்றோ?” 12

“தாண்டவனார்1 பதமிருக்கப் பிறபாட் டுக்குத்
       தாளங்கள் இடல்முறையா? கையில் பையில்
வேண்டுபொருள் நிறைந்திருக்கக் கடனுக் காக
       வேற்றவர்பின் தொழுதுசெலல் சரியா? பத்தி
வேண்டுமெனில் விளங்குமொழிப் பாடல் வேண்டும்;
       விளங்காத மொழிகேட்டால் உணர்வா தோன்றும்?
நீண்டபுகழ் பாரதிகள் குஞ்ச ரங்கள்2
       நிலைதமிழில் வீணுக்கா பாடிச் சென்றார்?” 13

இசைசுவைத்து மகிழ்வதற்கு மொழிவேண் டாவென்
       றியம்புகின்றீர்; அறிவுடைய வாதம் அன்று;
வசைமிகுந்த பிடிவாதம்; நீவிர் பாடும்
       வடமொழியும் தெலுங்கிசையும் மொழிகள் என்ற
இசைவுமக்கு வரவிலையோ? ஏனோ இந்த
       இழிசெயலை மேற்கொண்டீர்? தமிழில் மட்டும்
நசைவிடுத்த காரணமென்? உங்கள் வாழ்வின்
       நலிவுக்குத் தமிழ்செய்த தீமை என்ன? 14

“மொழிவேண்டா என்றுரைத்தீர்; வாதத் துக்கு
       மொழிந்ததைநான் ஏற்கின்றேன்; இசைஎ ழுப்பக்
குழலிருக்க யாழிருக்க அவைவி டுத்துக்
       குரலெழுப்பிப் பாடுவதேன்? பாடி வாழுந்
தொழிலுடைய பாகவதர் கூட்டந் தான்ஏன்?
       தொண்டைகிழித் தலறுவதேன்? அலறும் ஓசை
மொழியன்றோ? இசைக்கருவி யிருக்கும் போது
       மொழிஎதற்கோ? அதுமட்டும் வேண்டும் போலும்” 15


1.முத்துத்தாண்டவர். 2.பாரதிகள் குஞ்சரங்கள் - சி.சுப்பிரமணிய பாரதியார், கவிகுஞ்சர பாரதியார் போன்றோர்