இன்னியம் முழங்கும் ஓர்பால் இசையுடன் மூவர் சொன்ன நன்னயங் கெழுமு பாடல் நலமுற ஒலிக்கும் ஓர்பால் சின்னவர் ஓடி யாடுஞ் சிரிப்பொலி கேட்கும் ஓர்பால்; முன்னைய மறைகள் ஓதும் முழக்கமுங் கேட்கும் ஓர்பால். 4 கண்களைக் கவருங் கோலம் காதுகள் இனிக்கும் பாடல் தண்ணெனும் பந்தர் யாவும் சார்தரப் பொலிந்த தவ்வூர்; பண்ணுயர் தமிழில் வல்ல பண்டிதர்க் கறுபான் ஆண்டு நண்ணிய தறிந்த மக்கள் நகரினை அழகு செய்தார். 5 கொட்டிய முழவின் ஓசை, குலவிய குழலின் ஓசை, 1 பட்டியல் மடவார் பேச்சு, பச்சிளங் குழந்தை பாடல், 2அட்டிலில் முனைவார் கூவல், ஆடவர் அங்கு மிங்கும் இட்டநற் பணியின் மேவி அலைபவர் எழுப்பும் ஓசை, 6 வரவுரை கூறும் ஓசை வருபவர் வழங்கும் ஓசை மருவிய அன்பின் வந்தோர் வழங்கிய வாழ்த்தின் ஓசை, பரிசினைச் சுமந்து வந்தோர் பரப்பிய ஓசை யெல்லாம் செறிதரப் படர்ந்த தந்தச் செந்தமிழ் மனையில் யாண்டும். 7
1 பட்டுடுத்த, 2 சமையற்கூடம். |