பக்கம் எண் :

136கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

அணிதிகழ் முத்துப் பந்தர்
       அமைந்தநல் லரங்கில் ஏறி
மணிவிழாக் காணுஞ் செம்மல்
       மனையொடும் இணைந்தி ருந்தார்;
அணுகியே கதிரி ரண்டும்
       அருகொருங் கிருந்த தொத்தார்
துணைவியின் கழுத்திற் றாலி
       தொடுத்தனர் வாழ்த்தின் ஊடே. 8

பழுத்தவர் அடியில் வீழ்ந்து
       பற்பலர் வாழ்த்துப் பெற்றார்;
வழுத்துடன் பரிசில் நல்கி
       வணங்கினர் மகிழ்வு பெற்றார்;
கழுத்தியல் மாலை தாங்கும்
       கற்பினார் அருகில் நிற்கத்
தொழத்தகும் அம்மை யப்பர்
       தோற்றத்தை நினைந்தி ருந்தார். 9

முற்பகல் நிகழ்ச்சி யெல்லாம்
       முழுமையுஞ் சமயச் சார்பே;
பிற்பகல் நடந்த வெல்லாம்
       பீடுயர் தமிழின் சார்பாம்;
முற்பகல் கண்ட தெல்லாம்
       மூசுபூ மாலை யாகும்;
பிற்பகல் கண்ட தெல்லாம்
       பேசுபா மாலை யாகும். 10

மாநிதிக் கிழவ ரண்ணா
       மலைமனர் தலைமை ஏற்கக்
கோநிதிக் கிழவர் கூட்டம்
       குழுமியங் கினிதி ருக்கப்
பாநிதிக் கிழமை தாங்கும்
       பண்பினர் வாழ்த்து ரைக்க
மாமதிக் கிழவர்க் கங்கே
       மணிமலர்1 ஒன்றைத் தந்தார். 11


1.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் படைத்த மணிவிழா மலர்.