பக்கம் எண் :

ஊன்றுகோல்137

கரந்தையிற் சங்கங் கண்டோர்
       கனிந்தநல் லன்பின் ஊறிச்
சுரந்ததோர் மலரைச் சூட்டிச்
       சொல்லரும் மகிழ்வு பெற்றார்;
பரந்தநம் நாட்டில் தோன்றும்
       பற்பல கழகச் சார்பில்
நிரந்துபா மலர்சொ ரிந்து
       நெஞ்சினைத் திறந்து வைத்தார். 12

இறுதியில் மணியார் இயம்பினர் நன்றி;
‘பாட்டினும் உரையினும் பகர்ந்தன யாவும்
கூட்டு மன்பைக் குறித்தன வேயாம்
பன்மொழிப் புலவர்1 பாரதிச் செம்மல்2
என்னுயிர்த் தோழர்3 இவர்முத லாகச் 5
சொற்றநற் பெரியோர், உற்றுழி யுதவும்
பற்றுள சபையார்4 மற்றும் இவ்வுழை
இவ்விழா நிகழ்ச்சிகள் செவ்விதின் இயக்கிக்
கவ்விய அன்புடன் கடமை யாற்றியோர்
மலரும் அன்பின் விளைதரும் விலையிலா 10
மலரினை ஈந்து மனமகிழ் வூட்டியோர்
அனைவரும் என்றும் நினைதற் குரியார்;
அணிமையில் நிகழ்ந்த அண்ணா மலைமன்
மணிவிழா நாளில் மன்னர் மனையுள்
அளவிலாச் செவ்வியர் அடங்கி யிருந்தனர்; 15
அத்தகு மன்னர் அடியேன் சிற்றிலில்
அடங்கி யிருந்து தொடங்கின ராயின்
என்தவப் பேற்றை யாதென மொழிவேன்’
என்றுதம் நன்றியை எடுத்துரைத் தனரே.


1.தெ.பொ.மீ 2.நாவலர் ச.சோ.பாரதியார் 3.கரந்தை நீ கந்தசாமிப் பிள்ளை. 4.சன்மார்க்கசபையார்.