பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

15
பிணியுறு காதை

பாப்புனையுந் திறனுடைய புலவர் என்பார்
       படுவிரைவில் உணர்ச்சிகளுக் காளாய் நிற்பர்;
வாய்ப்பனவாம் இன்பதுன்பம் இரண்டி னுள்ளும்
       வருகின்ற அவ்வுணர்வின் வடிவாய் நிற்பர்;
காப்பிட்டு மறைத்துவிட அறிய மாட்டார்
       காட்டிடுவர் உணர்ச்சிகளை வெளிப்ப டுத்தே;
யாப்பவர்க்குத் தடையாக நிற்ப தில்லை
       அவர்வழியில் அதுநிற்கும் பாடல் தோன்றும். 1

வடித்தெடுத்த சொல்லழகர், நீற ணிந்த
       வடிவழகர், இருமொழியும் சொன்ன நூல்கள்
படித்தெடுத்த வாயழகர், சான்றோர் கூட்டம்
       பழகவரும் நட்பழகர், முதுமை யுற்றார்;
துடுக்குடுத்த வாதநோய் அவரைப் பற்றித்
       துன்புறுத்தத் துயர்க்கடலுள் வீழ்ந்து நொந்தார்.
வடுக்கெடுத்த மதியரைத்தான் தமிழ வானில்
       வாதமுகில் ஒளிமறைக்க வந்த தம்மா! 2

அணிபெற்ற கவிக்கம்பன் பாட்டுக் கன்பர்
       அரும்பொருளைத் தெரிந்துணர்ந்து விளக்கும் சொல்லர்
பிணியுற்ற சமுதாயக் கேட்டை யெல்லாம்
       பேர்த்தெடுத்த போர்மறவர் அன்பு நண்பர்
துணிவுற்ற1 முருகப்பர் செட்டி நாட்டுச்
       சுயமரியா தைப்பணிக்குச் சொந்தக் காரர்,
பிணியுற்றார் பண்டிதமா மணியார் என்று
       பெருந்துயரிற் புறப்பட்டார் 2யாமும் சென்றோம். 3


1.அமராவதிபுதூரில் மகளிரில்லங்கண்ட அறிஞர்.சொ.முருகப்பனார். 2.முடியரசன்