பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

ஆறுதலை வைத்தானைப் பரவும் அன்பர்
       ஆறுதலைப் பெற்றவராய்ப் பேச லுற்றார்,
“சீறுதலை உம்மிடத்துக் கொண்ட தாலே
       சிலநேரம் உமைத்தாக்கிப் பேசி யுள்ளேன்
மாறுதலைப் பெரிதாக மனத்துட் கொண்டேன்
       மனங்கொள்ளா ததையெல்லாம் மறந்து விட்டுத்
தேறுதலைக் கூறுதற்கு வந்தீர் உங்கள்
       திருவுளத்துப் பெருமையினைத் தெரிந்தே னல்லேன்”. 8

“நடந்ததைஏன் மீண்டுமினி நினைக்க வேண்டும்?
       நானெதுவுங் கருதவில்லை; நம்மனத்துட்
கிடந்ததைநாம் வெளிப்படுத்த மேடை ஏறிக்
       கிளக்குங்கால் வேறுபடும் நிலைகள் அங்குத்
தொடர்ந்துவரல் முறைதானே; அதனா லென்ன?
       தொண்டுசெயும் பொதுவாழ்வில் இன்னோ ரன்ன
படர்ந்துவரும்” எனமொழிய அமைதி கண்டார்;
       பண்பட்ட உள்ளத்திற் பகைமை ஏது? 9

“மலையத்து நாட்டிலுள இராம சாமி
       மடலொன்று நலங்கேட்டு வரைந்தி ருந்தார்
நிலைபற்றி நானவர்க்கு மடல்வ ரைந்தேன்
       நிலைத்திருந்து தருதுயரைக் கவிதை யாக்கி
அலைகடலுக் கப்பாலே உய்த்து வைத்தேன்
       அவர்மகிழ்ந்தார்1 ” எனவுரைத்து மணிம கிழ்ந்தார்.
அலைவுறுத்தும் பிணியுழந்தும் கவிதை தந்தார்;
       அக்கவிதை ‘சீதநீர்’ எனத்தொ டங்கும். 10

பாடலதைப் பாடுங்கால் அவர்மு கத்திற்
       படர்ந்துவரும் ஒளிகண்டோம்; இதழில் முன்போல்
ஓடிநடம் பயில்கின்ற முறுவல் கண்டோம்;
       உவகையொடு தெளிவினையும் விழியில் கண்டோம்;
வாடவரும் பிணிமறந்து தமைம றந்து
       வாய்மலர்ந்த மணிமொழியைக் கேட்டு வந்தோம்;
பீடுபெறு பெருமிதமும் தோன்றக் கண்டோம்;
       பிணிதவிர்த்து நலமளிக்கும் தமிழே வாழி. 11


1.மகிபாலன்பட்டி.சி.ராம.இராமசாமிச்செட்டியார்.