பக்கம் எண் :

ஊன்றுகோல்141

பண்டிதமா மணிப்புலவர் நோயு ழந்து
       பரிதவிக்கும் செய்திதனை ஒருநாள் கேட்டு,
மண்டிவரும் பெருந்துயரம் தாங்கா தாங்கண்
       மலை2 யுறையும் அடிகளவர் ஓடி வந்தார்
அண்டிவரும் இன்பதுன்ப உணர்வெ தற்கும்
       ஆளாகா திருப்பதுவே துறவோர் கொள்கை;
கண்டுநிகர் தமிழ்ச்சான்றோர்க் குற்ற துன்பம்
       கசிந்துருகச் செய்ததுகாண் துறவி நெஞ்சை. 12

பதறிவரும் நம்மடிகள் பூங்குன் றத்திற்
       படுத்திருக்குந் தமிழ்வடிவைக் கண்டு நொந்தார்;
கதறியழ இயலாது செயல்ம றந்து
       கசிந்துருகி நின்றிருந்தார்; அதனைக் கண்ட
கதிர்மணியார் பொறியொடுங்கிப் புலனொ டுங்கிக்
       கண்கலங்கிக் கைதொழுது நலிந்து ழன்றார்;
முதலிலெவர் வாய்மலரும் மலர வில்லை
       முத்துதிர்த்துச் சிவந்தனகாண் விழிகள் நான்கும். 13

உள்ளத்தால் உணர்ச்சியினால் ஒன்று பட்டால்
       உதடுகளுக் கங்கென்ன வேலை? நெஞ்சம்
விள்ளத்தான் துடிதுடிக்கும், ஆனால் ஒன்றும்
       விளம்பத்தான் இயலாது, விழிகள் மட்டும்
மெள்ளத்தான் உணர்த்திவிடும், அதனால் 1குன்றின்
       மீதுறைவார், 2பூங்குன்றர் கூடும் அன்பு
வெள்ளத்தில் மூழ்கியதால் உளக்க ருத்தை
       வெளிப்படுத்தி விளக்கினகாண் முகங்கள் மட்டும். 14

நெடிதுயிர்த்துச் சிறுநேரங் கழிந்த பின்னர்
       நிறைதமிழின் சுவைகண்ட வாய்ம லர்ந்தார்;
‘அடியவனைக் காண்பதற்கோ அடிகள் வந்தீர்?
       அன்புளத்தால் எனக்கருளத் தேடி வந்தீர்
அடிகள்திரு வடிபடர எனது சிற்றில்
       அஃதென்ன மாதவந்தான் செய்த தோ’வென்
றடிமனத்திற் பூத்துவரும் உணர்ச்சிப் பூவை
       அன்பெனுநார் தொடுத்தெடுத்து முன்னர் வைத்தார். 15


1.குன்றக்குடிமலை 1.குன்றக்குடி அடிகளார். 2. பண்டிதமணியார்