பக்கம் எண் :

180கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

இளம்பெருவழுதி

காட்சி -1

ஓவியஞ் சிற்பம் ஒருங்குட னமைந்த
காவியக் கோட்டையுட் கருத்துணர் வூட்ட
ஆவலில் முதியர் ஆர்வநல் லிளைஞனைக்
கூஉய் விளக்கங் கூறினர் அவற்கே.

.................
முதியவர்:பூமலர் பொய்கையுட் பூவையர் குழுமிக்
காமரு புனலிற் களிப்புடன் ஆடலும்
தையலர் முகமோ தாமரை மலரோ
ஐயுறும் வகையான் அமைந்ததுங் காண்நீ
விரும்பித் தேனுணச் சுரும்பினம் வருடித்
திரும்பித் திகைத்துச் சேறலும் நோக்குதி;
இளைஞன்:பழுதிலீர் நுந்தம் பகர்வா லன்றோ
எழுதிய ஓவியம் இதுவென வுணர்ந்தேன்.
ஓ ஓ! இவைதாம் உயிரோ வியமே!
காவா திருப்பிற் காண்பமோ இதன்றிறம்?
முதியவர்:இலைநிகர் எனுமா றேத்திப் புகழும்
கலைபல தேர்ந்த கைத்திறம் வல்லார்
முன்னையர் பன்னூற் றாண்டின் முன்னர்
அந்நல் லோவியம் எழுதினர் அறிகதில்;