| | | வாட்படை தாங்கும் வலந்தரு பாண்டியன் மீப்படு புலமை விஞ்சிய புலவரொடு அரண்மனை ஒருசார் அமர்ந்தன னாகி ஒருமகன் வழுதியின் திருமணங் குறித்துக் கலந்துரை யாடக் கயல்விழித் தேவியும் மகிழ்ந்துரை யாடினள் மாலைப் பொழுதே. |
| | | 0 0 0 0 |
| | | (புலவர் வருகிறார்) |
| பாண்டியன் | : | வண்டமிழ்ப் பெரியீர் வருக வருக அண்டை யிருக்கையில் அமர்ந்தருள் புரிக |
| நாகனார் | : | (இருக்கையில் அமர்ந்து) ஒப்பருந் தேவியோ டொருங்கினி திருந்த வெப்பகல் மார்பநின் மெய்ப்புகழ் வாழ்க எப்பொருட் டாக எனையிங் கழைத்தனை? |
| பாண்டியன் | : | நாளைய வேந்தன் நம்மகன் வழுதிக் காளையின் தகவுகள் கலந்துரை யாடஇவ் வேளை நுமது வருகை வேண்டினம்; |
| நாகனார் | : | வைய மாந்தர் மனத்துறு கருத்தைக் கையாள் உரைசெயுங் காலம் இரியப் பைய நாவை யசைத்த பழந்தமிழ் ஐயன் கற்றுள ஆற்றல் பெரிதுமன்; |