பக்கம் எண் :

இளம்பெருவழுதி205

 :வெந்நிட லறியா வெல்போர்க் கடம்பன்
பின்னவள் சுரும்பார் குழலியும் இவனும்
ஒருவர்க் கொருவர் பொருவறு நிலையினர்
இருவருள் முதல்வர் இவனா அவளா
எவரெனத் தெளிதல் இயலாத் தகைத்தே;
மாதேவி:ஆமாம் அவளை அறிகுவென் யானும்
அம்மா மகளின் பொறையும் பொற்பும்
செறிந்தநல் லறிவும் செவ்விய பண்பும்
நிறைந்தவள் அவளென் நெஞ்சங் கவர்ந்தவள்;
நாகனார்:நின்னெஞ் சொன்றோ? நின்மகள் நெஞ்சும்
பொன்மகள் அவள்தான் புகுந்து கவர்ந்தனள்
நாகனார்:காதல் எனயான் கழறினே னல்லேன்;
ஓதுங் கல்வி உயரிய பண்பு
பேதை யவள்பாற் பெருகுதல் கண்டு
தீதிலான் அன்பைச் சிறியாட் கீந்தனன்
எனவே மொழிந்தனென்; ஈதொரு குறையோ?
மாதேவி:மனங்கொளும் ஒருத்தியை மணங்கொள விழைதல்
சினங்கொளற் குரித்தோ? . . . . . . . .
பாண்டியன்:. . . . . . . . . சினமே எமக்கிலை
அன்பா? காதலா? அறிய விழைந்தனம்;
இம்மா தேவிக் கிசைவெனில் எமக்கும்
மறுப்பிலை விரைவில் மணவினை தொடங்குதும்;
விரும்புவ தெனிலோ வேல்விழி மொழிக;
மாதேவி:மறுப்பும் விருப்பும் மகன்சொல லன்றோ
பொருத்தம்; . . . . . . . . .
பாண்டியன்:. . . . . தேவி, பொங்கு கடல்சூழ்
காழக வேந்தன் கடுங்கட் சீயன்
ஏழிசைச் செல்வி எழிலியாம் மகளை
வழுதிக் கீயும் விழைவினன் என்பது
பழுதிலா அமைச்சர் பகரக் கேட்டுளேம்;